ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் ஆதரவாளர்கள் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக டெல்லியில் தேர்தல் கமிஷனிடம் ஓ.பி.எஸ். அணியினர் மனு கொடுத்தனர்.
ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.இங்கு அ.தி.மு.க. இரு அணிகளாக போட்டியிடுகிறது. சசிகலா அணியின் சார்பாக டி.டி.வி. தினகரனும், ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பாக மதுசூதனனும் போட்டியிடுகிறார்கள்.
ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் அணியினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதாக ஓ.பி.எஸ்.அணியினர் தொடர்ந்து புகார் கூறி வந்தனர்.
இந்தநிலையில் ஓ.பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த மைத்ரேயன், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷனில் இன்று புகார் மனு கொடுத்தனர்.
மனுவில், “ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் ஆதரவாளர்கள் பணப்பட்டு வாடா செய்வதாகவும், தேர்தல் முறைகேட்டை தடுக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டு உள்ளனர்.