நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படும் வகையிலான பொருத்தமற்ற கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்குமாறு தான் அனைவருக்கும் வேண்டுகோள் விடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
இன்று முற்பகல் இலங்கை இராணுவத்தின் விசேட படையணிக்கு ஜனாதிபதி மற்றும் ரெஜிமென்ட் வர்ணமளிப்பதை அடையாளப்படுத்தும் ரண பரஷூவ, ரெஜிமென்ட் பரஷூவ விருது விழாவில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தாய் நாட்டினதும் மக்களினதும் எதிர்காலம் பாதிக்கப்படத்தக்க கருத்துக்களை எவரும் வெளியிடக்கூடாதெனத் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு, சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்காக முப்படையினர் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையினர் ஆற்றிவரும் பணிகளை பாராட்டிய ஜனாதிபதி அவர்கள், ஒட்டுமொத்த தேசமும் என்றும் படையினருக்கு கடமைப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
கீழ்த்தரமான அரசியல் தேவைகளுக்காக படையினரின் அளப்பரிய சேவையினை குறைத்து மதிப்பிட இடமளிக்க முடியாதெனவும் அன்று இராணுவத்திற்கு தலைமைத்துவத்தை வழங்கியவர்களே இன்று குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கமைய அத்தகைய முறையற்ற கருத்துக்களை வெளியிடுதல் தொடர்பில் தான் பெரிதும் கவலையடைவதாக தெரிவித்தார்.
தற்போது அரசாங்கம் பாதுகாப்புத் துறையினருடன் இணைந்து தேசிய பாதுகாப்பினை உயரிய அளவில் உறுதி செய்திருப்பதோடு மீண்டும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு இலங்கையில் இடமளிக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
நாவுல ரெஜிமென்ட் படையணி தலைமையகத்திற்கு இன்று முற்பகல் விஜயம் செய்த முப்படைகளின் தளபதியாகிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மிகுந்த அபிமானத்துடன் வரவேற்கப்பட்டதுடன், அவ்வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ நினைவுத் தூபிக்கு ஜனாதிபதி மலரஞ்சலி செலுத்தினார்.
வீரத்தின் அடையாளமாக விளங்கும் பண்டைய ரண பரஷூவ விருது வரலாற்றில் முதன்முறையாக வழங்கப்பட்டமை இதுவாகுமென்பது குறிப்பிடத்தக்கதாகும்.
விசேட படையணியினர் உயிர்த்தியாகம் செய்து தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக நிறைவேற்றும் ஒப்பற்ற சேவையினை பாராட்டும் வகையில் வர்ண ரெஜிமென்ட் உபயோகிக்கப்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அதற்கு சமமாக உபயோகிக்கக்கூடிய விசேட ஜனாதிபதி ரண பரஷூவ மற்றும் ரெஜிமென்ட் ரண பரஷூவ விருது வழங்கப்படுதல் விசேட படையணியினருக்கு மிகுந்த அபிமானத்தையும் கௌரவத்தையும் பெற்றுக்கொடுக்கின்றது.
விசேட படையணி தலைமையகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தலைமையக கட்டிடத்தையும் ஜனாதிபதி அவர்கள் இன்று திறந்து வைத்தார்.
நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து அலுவலகத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, அதனை பார்வையிட்டதுடன், விசேட அதிதிகள் புத்தகத்திலும் கையெழுத்திட்டார்.
பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட, பாதுகாப்பு பதவிநிலை பிரதானி உள்ளிட்ட முப்படை தளபதிகள், விசேட படையணி தலைமையகத்தின் கட்டளைத் தளபதி கேர்ணல் சந்திமால் பீரிஸ் உள்ளிட்ட இராணுவ பிரதானிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.