நாட்டில் இடம்பெற்ற 30 வருட யுத்தத்தைப் போலன்றி சர்வதேச பயங்கரவாதம் வித்தியாசமானது. அதன் தாக்குதல் எங்கு எப்போது இடம்பெறுமென்பதை கூறமுடியாது எனவும், சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் அதனை ஒழிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிக்கும் பொறுப்பை நாட்டின் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் முப்படையினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர்கள் வெற்றிகரமாக அதனை முன்னெடுப்பார்கள் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தத்தில் உயிர்நீத்த படைவீரர்களை நினைவுகூரும் பத்தாண்டு நிறைவு வைபவம் நேற்று (19) பத்தரமுல்லை பாராளுமன்ற வளாகத்திலமைந்துள்ள படைவீரர்கள் நினைவுத் தூபிக்கு அருகாமையில் நடைபெற்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்வுகளில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் முப்படைத் தளபதிகள், முக்கிய அரசியல் பிரமுகர்கள், உயிரிழந்த படை வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.