காலத்தை வீணடிக்காமல் நல்லாட்சி விரைந்து செயற்பட வேண்டும்
போர்க்குற்ற விசாரணை மற்றும் போருக்குப் பின்னரான நல்லிணக்கம் தொடர்பாக ஐ.நா மனித உரிமை பேரவையின் பரிந்துரைகள் தொடர்பில், காலத்தை வீணடிக்காமல் நல்லாட்சி அரசு உடனடியாக அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
மட்டக்களப்பு செங்கலடி விவேகானந்தா வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைப் பேரவைவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைச் செயற்படுத்துவதற்கு ஸ்ரீலங்கா அரசு 2015 ஆம் ஆண்டு 18 மாத கால அவகாசத்தை வழங்கியிருந்த போதிலும் ஸ்ரீலங்கா அரசு எந்த விடயத்தையும் முழுமையாக நிறைவேற்றவில்லை என்று குறிப்பிட்ட அவர்,
ஸ்ரீலங்கா அரசு போர்க்குற்ற விசாரணை மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் தொடர்ந்துமட் காலத்தை இழுத்தக்காமல் உடனடியாக செயற்பட வேண்டும் என்றும் கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு போர்க்குற்ற விசாரணகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பன போன்ற கருமங்களை செயற்படுத்த ஸ்ரீலங்கா அரசுக்கு தற்போது மீண்டும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமையையும் சுட்டிக்காட்டினார்.
ஸ்ரீலங்காவில் பாதிக்கப்பட்ட மக்களிடையே அமைதியின்மை நிலவி வரும் நிலையில் அரசாங்கம் இதில் அதிக கவனத்தைச் செலுத்த வேண்டும் என்று மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் ஷெயிட் அல் ஹூஸைன் எச்சரித்துள்ளமை வரவேற்கத்தக்கது என்றும் வியாழேந்திரன் தனது உரையில் தெரிவித்துள்ளார்.



