நேற்று நாடாளுமன்றத்தில் குழுநிலை வாக்கெடுப்பின்போது இரண்டு அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீடுகள் தோல்வியடைந்தன. வஜிர அபேவர்த்தனவின் கீழ் உள்ள உள்நாட்டு விவகார, மகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் சம்பிக்க ரணவக்கவின் கீழ் உள்ள பெருநகர, மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றிற்கான ஒதுக்கீடுகளே தோல்வியடைந்தன.
நேற்று இந்த அமைச்சுக்கள் மீதான விவாதம் நடைபெற்றது. மாலையில் ஆளுந்தரப்பில் உறுப்பினர்கள் குறைவாக இருந்த சமயத்தை பயன்படுத்தி, எதிரணியின் ரஞ்சித் சொய்சா எம்.பி, வாக்கெடுப்பை கோரினார். இரவு 7.3்0 மணியளவில் வாக்கெடுப்பிற்கு உத்தரவிட்டார் சபாநாயகர்.
வஜிர அபேவர்த்தனவின் கீழ் உள்ள உள்நாட்டு விவகார, மகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஒதுக்கீடுகள் தொடர்பான வாக்கெடுப்பில், ஆதரவாக 23 வாக்குகளும், எதிராக 38 வாக்குகளும் விழுந்தன.
சம்பிக்க ரணவக்கவின் கீழ் உள்ள பெருநகர, மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் ஒதுக்கீடுகள் தொடர்பாக வாக்கெடுப்பில் ஆதரவாக 24 வாக்குகளும், எதிராக 38 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இந்த வாக்கெடுப்பின்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் இருவர் நாடாளுமன்றத்தில் இருந்தனர். தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரே அவர்கள். இருவரும், இரண்டு வாக்கெடுப்பிலும், ஆதரவாக வாக்களித்தனர்.
இதேவேளை, நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் காலையில் நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் கூடி உத்தியோகப்பற்றற்ற முறையில் முடிவொன்றை எடுத்திருந்தனர்.
கல்முனை தமிழ் உப பிரதேசசெயலகத்தை தரமுயர்த்தும் விடயத்தில், உள்நாட்டலுவல்கள் அமைச்சு இழுத்தடிப்பை செல்வதற்கு எதிர்ப்பை காண்பிக்க, அந்த அமைச்சு மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்வதில்லையென முடிவெடுக்கப்பட்டிருந்தது.
அதேவேளை, ரெலோ அமைப்பின் அரசியல் உயர்பீடத்தில் எடுக்கப்பட்ட முடிவு- இந்த வரவு செலவு திட்டத்தை ஆதரிப்பதில்லையென்பது.
அதை மீறி, வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பிற்கு ஆதரவாக வாக்களித்திருந்தார் கோடீஸ்வரன் எம்.பி. கட்சி முடிவிற்கு அமைய வாக்களிக்காமல் தவிர்த்தார் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.
ஆனால், நேற்று அரசாங்க தரப்பில் எம்.பிக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது, தோல்வியடைய போகிறது என்ற சூழல் ஏற்பட்டதும், கட்சி மற்றும் கூட்டு முடிவுகளை கைவிட்டு, அரசிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
இதேவேளை, குழுநிலை விவாதத்தில் அமைச்சுக்களின் ஒதுக்கீடுகள் தோற்கடிக்கப்பட்டாலும், ஒதுக்கீட்டு பிரேரணையில் திருத்தம் செய்து மீள்வாக்கெடுப்பை கோரலாமென்பது குறிப்பிடத்தக்கது.