இலங்கை சர்வதேச முதலீடுகளை இழக்கின்றது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

உறுதியற்ற அரசியல் செயற்பாடுகளால் இலங்கை அரசாங்கம் பல முதலீடுகளை இழந்து வருவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

கம்பஹாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) எலிய அமைப்பின் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த நான்கு ஆண்டுகளில் இலங்கையால் புதிதாக நேரடி முதலீட்டு வாய்ப்புகளைப் பெற முடியவில்லை. இதற்கு இங்கு காணப்படும் அரசியல் ஸ்திரமற்ற தன்மையே பிரதான காரணமாகும்.

நிலையான அரசியல் சூழலை ஏற்படுத்த முடியாத இந்த அரசாங்கத்தினால் பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவுகளை நாடு சந்தித்துள்ளது.

கடந்த எமது ஆட்சியில் சீனாவின் முதலீடுகள் தொடர்பாக சில நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன என்பதை நான் ஒப்புக் கொண்டுள்ளேன்.

ஆனால் நாட்டினது அபிவிருத்தியினைக் கருத்திற்கொண்டு ஏனைய நாடுகளின் முதலீடுகளையும் வரவேற்பது அவசியம்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் கூட இல்லாத அரசாங்கத்தினால் தொடரும் அரசியல் நெருக்கடியால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மட்டுமன்றி, உள்நாட்டு முதலீட்டாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்” என கோட்டாபய ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.