நாடாளுமன்றில் அண்மையில் இடம்பெற்ற அநாகரிக செயல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் தெரிவுக் குழு, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இன்று (வியாழக்கிழமை) கூடியது.
கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இதன் பின்னர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை அடுத்து கூட்டப்பட்ட நாடாளுமன்ற அமர்வில் சர்ச்சைகள் இடம்பெற்றன.
குறிப்பாக நாடாளுமன்றில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் மைத்திரி – மஹிந்த தலைமையிலான அணியினருக்கிடையில் மோதல் இடம்பெற்றது. அத்தோடு இதன் போது மிளகாய் தூள் தாக்குதலும் நடத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 14, 15, மற்றும் 16 ஆம் திகதிகளில் இடம்பெற்ற மோதல்கள் தொடர்பில் விசாரணை செய்ய சபாநாயகர் கருஜயசூரிய, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் விசாரணைக் குழு ஒன்றை நியமித்திருந்தார்.
இந்த குழுவின் முதற்கட்ட நடவடிக்கையாக நாடாளுமன்ற சி.சி.ரி.வி காணொளிகள் பரீசிலிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் நாடாளுமன்றில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் குறித்து விசாரிக்கும் விசாரணைக் குழு பிரதி சபாநாயகர் தலைமையில் இன்று காலை கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





