ஜெயலலிதா நினைவிடத்தில் தீபா வேட்புமனுவை வைத்து அஞ்சலி
ஆர்.கே.நகரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள தீபா, மெரினாவில் ஜெயலலிதா சமாதியின் மேல் வேட்புமனுவை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறவிருக்கிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள். இந்நிலையில்ஆர்.கே.நகரில்’ பேரவை சார்பில் போட்டியிடும் தீபா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளனர்.
சசிகலா அணி வேட்பாளராக டி.டி.வி. தினகரனும், ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளராக மதுசூதனனும் அறிவிக்கப்பட்டுள்ளனர். மற்றொருபுறம் தி.மு.க தரப்பில் மருதுகணேஷ், தே.மு.தி.க. வேட்பாளர் மதிவாணன், பாஜக வேட்பாளராக கங்கை அமரனும் களமிறங்கியுள்ளனர். இன்று காலை ஓ.பி.எஸ் அணி சார்பில் போட்டியிடும் மதுசூதனன் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.பாஜக வேட்பாளர் கங்கை அமரனும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ஆர்.கே.நகரில் போட்டியிடுவதாக தீபா ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்நிலையில், தனது ஆதரவாளர்களுடன் மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு இன்று காலை தீபா வந்தார். அப்போது, ஜெயலலிதா சமாதியின் மேல் வேட்புமனுவை வைத்து தீபா அஞ்சலி செலுத்தினார். ஆனால், தீபாவின் கணவர் மாதவன் வரவில்லை. இன்று பிற்பகலில் தீபா வேட்புமனுத் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் இரட்டை இலையை முடக்கிய தேர்தல் ஆணையம், பன்னீர்செல்வம் அணிக்கு ‘அஇஅதிமுக புரட்சித் தலைவி அம்மா’ என்ற பெயரும்,’இரட்டை மின்கம்பம் சின்னத்தையும்’ ஒதுக்கியுள்ளது. மற்றொரு புறம் சசிகலா அணிக்கு, ‘அஇஅதிமுக அம்மா’ என்ற பெயரும், ‘தொப்பி’ சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. டி.டி.வி தினகரன் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

