Thursday , August 28 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / 551 பேரை கூலிப்படையை பாவித்து கோட்டாவே கொன்றார்: மனோ

551 பேரை கூலிப்படையை பாவித்து கோட்டாவே கொன்றார்: மனோ

551 பேரை கூலிப்படையை பாவித்து கோட்டாவே கொன்றார்:மனோ

கொழும்பு நகரிலும், அதன் புறநகரங்களிலும் தமிழ் இளைஞர்கள் உட்பட 551 பேர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவினால் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக தேசிய கலந்துரையாடல் மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபயவினால் கடத்திச் சென்று படுகொலை செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல் தன்னிடம் இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

கொழும்பு ஸ்ரீ கதிரேசன் வீதி புனர்நிர்மாணம் செய்யப்பட்டு இன்றைய தினம் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

தேசிய கலந்துரையாடல் மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் இந்த வீதியை திறந்து வைத்தார்.

கடந்த காலங்களில் தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் எனப் பலரும வெள்ளை வானில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாகவும், இந்தப் படுகொலைகளை நடத்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் இரகசிய கொலைப் படையை இயக்கியதாகவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அண்மையில் தெரிவித்திருந்தார்.

எனினும் இந்தக் குற்றச்சாட்டை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச மறுத்திருந்தார்.

இந்த நிலையில் இன்றைய தினம் அமைச்ச் மனோ கணேசன் இதுகுறித்து தனது கருத்துக்களை ஊடகங்களுக்கு முன்பாகத் தெரிவித்தார்.

“இலக்கத்தகடு இல்லாத வாகனங்களில் உத்தியோகபூர்வ சீருடையின்றி வந்து, தம்மை அடையாளப்படுத்தாமல் நள்ளிரவில் வந்து கதவுகளைத் தட்டி தூக்கிச்சென்றனர். இதற்கெதிராக நான் முன்வந்தபோது என்னுடன் லசந்த விக்ரமதுங்க இருந்தார். அதுகுறித்து எழுதியதினால் அவர் படுகொலை செய்யப்பட்டார். ரவிராஜ் என்னுடன் இருந்து, அதற்கெதிராக குரல் கொடுத்தபடியினால் அவரும் கொலை செய்யப்பட்டார். கொழும்பு நகரிலும், அதனை அண்மித்த பகுதிகளிலும் 551 பேர் இவ்வாறு கடத்திச்செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

என்னிடம் பெயர்பட்டியல் உள்ளது என்பதை கோட்டாபய ராஜபக்சவுக்கு கூறிவைக்க விரும்புகிறேன். நான் என் கண்களால் கண்டேன். கடத்திச்சென்று ஓரிரு தினங்களின் பின் சடலங்கள் மீட்கப்பட்டன. இவை இடம்பெறவில்லை என்று கூறமுடியாது. அந்த அளவுக்கு இந்நாட்டு மக்கள் முட்டாள்கள் அல்லர்.

சட்டத்திற்குப் புறம்பான இந்த செயற்பாடுகள் அவரால் செய்யப்பட்து. இவரால் செய்யப்பட்டது என்று கோட்டாபயவினால் கூறமுடியாது. ஏனென்றால் அவரே அப்போது பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றியவர். இவ்வாறான குற்றச் செயல்கள் காரணமாகவே சர்வதேச அரங்கிற்கு ஸ்ரீலங்கா சென்று, முழங்கால்படியிட்டு குரல் கொடுக்க நேரிட்டுள்ளது. இந்த நாட்டுப் பிரச்சினைகளை வெளிநாட்டிற்குச் சென்று பேச்சு நடத்துவதை நான் விரும்பவில்லை. ஆனால் முன்னைய ஆட்சியாளர்களே இந்த நிலைக்கு எம்மைத் தள்ளிவிட்டுள்ளனர்” என்றார்.

இதேவேளை ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் ஸ்ரீலங்கா விவகாரம் தொடர்பாக வழக்காடும் நிலைக்கு நாட்டைத் தள்ளியமைக்கான பொறுப்பை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே ஏற்கவேண்டும் என்று தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன், சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை ஒருபோதும் மீறமுடியாது என்றும் கூறினார்.

“இன்று ஜெனீவாவில் ஸ்ரீலங்கா தொடர்பாக விவாதங்கள் இடம்பெறுகின்றன. ஏன் இவை இடம்பெறுகின்ற என்பது குறித்து அனைவருக்கும் கேள்விகள் எழலாம். இந்த வழக்கு விசாரணை செய்யும் நடவடிக்கைகளை யார் ஆரம்பித்தது? 2009ஆம் ஆண்டு மே 23ஆம் திகதி அப்போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்சவின் அழைப்பை ஏற்று முன்னாள் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கி மூன் ஸ்ரீலங்காவுக்கு வந்து திரும்பும்போது மஹிந்தவுடன் இணைந்து கூட்டு அறிவிப்பொன்றை விடுத்திருந்தார்.

அதில் ஐ.நா மனித உரிமைகள் பிரகடனப்படி நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும், 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி இனப்பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாகவும் உறுதியளிக்கப்பட்டது. எனவே இந்த அளவு தூரத்திற்கு நாட்டுப் பிரச்சினை சென்றதன் காரணம் மஹிந்த ராஜபக்சதான். சர்வதேச அமைப்புடன் ஒப்பந்தம் செய்துவிட்டு அதனை உள்நாட்டில்கூட மீறுவதற்கு முடியாது” என்று கூறினார்.

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …