தமிழர் தாயகத்தில் உறுதியுடன் தொடர்கின்றன உறவுகளின் போராட்டங்கள்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
தமிழர் தாயகத்தில் உறுதியுடன் தொடர்கின்றன உறவுகளின் போராட்டங்கள்!

கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்து தருமாறும், அவர்களுடைய உண்மையை வெளிப்படுத்துமாறும் வலியுறுத்தி இன்று 31 ஆவது நாளாகவும் கிளிநொச்சியில் போராட்டம் தொடர்கின்றது. வடக்கு, கிழக்கில் ஏனைய மாவட்டங்களில் இடம்பெறும் போராட்டங்களும் நீண்டு கொண்டே செல்கின்றன.

வடக்கில் 4 மாவட்டங்களிலும், கிழக்கில் திருகோணமலை மாவட்டத்திலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்துகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலையும், விடுதலையையும் வலியுறுத்தியே அவர்கள் போராட்டத்தைத் தொடர்கின்றனர்.

தமக்கு உறுதியான தீர்வு கிடைக்கும்வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

வடக்கில் கிளிநொச்சி, வவுனியா, முல்லைதீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உறவினர்கள் உறுதியுடன் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்தப் போராட்டங்களுக்கு நாளுக்கு நாள் பொது அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் தலைவர்கள், இளைஞர் அணியினர் என ஆதரவுகளும் வலுவடைகின்றன.

இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் 31ஆவது நாளாகவும், வவுனியா மாவட்டத்தில் 27 ஆவது நாளாகவும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 15ஆவது நாளாகவும், யாழ்ப்பாணத்தில் 8ஆவது நாளாகவும், கிழக்கில் திருகோணமலையில் 18ஆவது நாளாகவும் போராட்டங்கள் தொடர்ந்தன.

நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை இவ்வாறு தொடர் போராட்த்தில் ஈடுப்படப் போவதாகவும், சில வேளைகளில் தங்களின் போராட்டத்தின் வடிவத்தை மாற்றி எதிர்வரும் நாட்களில் போராட வேண்டி வரும் எனவும் போராட்டக்காரர்கள் எச்சரித்துள்ளனர்.

இதேவேளை, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்தில் வயது முதிர்ந்த தாய் ஒருவர் நேற்று மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த 30 நாட்களாக முன்னெடுத்து வரும் குறித்த போராட்டத்தில் அதிக வெப்பம் காரணமாக குறித்த தாய் மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து, விசேட அம்புலன்ஸ் மூலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

 

Tamil Technology News

 

Tamilnadu News