மஹிந்த, கோட்டாவை உடன் கைதுசெய்! – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வலியுறுத்து
“மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் – கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த காலத்தில்தான் எமது உறவுகள் பலர் காணாமல் ஆக்கப்பட்டனர். இதனை தற்போதைய மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசும் வெளிப்படையாகக் கூறியுள்ளது. எனவே, மஹிந்தவையும், கோட்டாபயவையும் உடன் கைதுசெய்து கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை இந்த அரசு விசாரணையின் ஊடாக வெளிப்படுத்த வேண்டும். குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கவேண்டும்.”
– இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒருமித்த குரலில் தெரிவித்தனர்.
“காணாமல்போனவர்கள் அல்லது கடத்தப்பட்டவர்களில் பலர் அன்றைய தினமே கொல்லப்பட்டிருக்கலாம். மஹிந்த அரசில் இடம்பெற்ற அனைத்துக் கொலைகள் மற்றும் கடத்தல்களுக்கு முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அலுவலகத்திலிருந்தே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே முன்னெடுத்துள்ளார் என்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். எனவே, மஹிந்தவுக்கும் கோட்டாபயவுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க தற்போதைய அரசு ஏன் தயக்கம் காட்டுகின்றது?” என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறும், அவர்களுடைய உண்மையை வெளிப்படுத்துமாறும் வலியுறுத்தி, வடக்கு மாகாணத்தில் அறவழிப் போராட்டங்கள் உக்கிரமடைந்து செல்கின்றன. கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் வவுனியா, முல்லைத்தீவு என்று விரிவடைந்து சென்று யாழ்ப்பாணத்திலும் முன்னெடுக்கப்படுகின்றது. காணாமல்போனவர்களின் உறவினர்கள் உறுதியுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று 27 ஆவது நாளாகவும், வவுனியா மாவட்டத்தில் இன்று 23 ஆவது நாளாகவும், முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று 11 ஆவது நாளாகவும், யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று 4ஆவது நாளாகவும் போராட்டங்கள் தொடர்கின்றன. இந்தப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள உறவினர்கள் அனைவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா? இல்லையா? இருந்தால் எங்கு உள்ளனர்? இல்லை என்றால் அவர்களுக்கு என்ன நடந்தது? என்பதை அரசு வெளிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாகக் கடும் மழை பெய்தபோதும், மக்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை. அவர்களால் அமைக்கப்பட்ட தகரக் கூடாரத்துக்குள் ஒதுங்கி இருந்து, அலைந்ததுபோதும் இனியாவது எங்களுக்கு நல்ல தீர்வு தாருங்கள், எங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்காது இங்கிருந்து நாங்கள் செல்லமாட்டோம் என்ற உறுதியுடன் தமது அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை இவ்வாறு தொடர் போராட்த்தில் ஈடுப்படப் போவதாகவும், சில வேளைகளில் தங்களின் போராட்டத்தின் வடிவத்தை மாற்றி எதிர்வரும் நாட்களில் போராட வேண்டி வரும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
அதேபோல் வவுனியாவில், சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டமாக இந்தப் போராட்டம் மாற்றம் கண்டு இன்று 23ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
முல்லைத்தீவில் இடம்பெறும் கவனயீர்ப்புப் போராட்டமும் உறுதியுடன் இடம்பெற்று வருகின்றது. இன்று 10 நாளாகவும் தொடரும் அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், “காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே? அரசே பதில் கூறு” என்று கதறி அழுகின்றனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் மருதங்கேணி பிரதேச செயலகத்துக்கு முன்பாக மரநிழலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 4ஆவது நாளாக கொட்டகை அமைத்துத் தொடர்கின்றது.

