நாடு முழுவதும் வளர்ச்சிப்பணிகளுக்காக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை 100 ஆண்டுகளுக்கு முன்பு ரெயில்வே இலாகா கையகப்படுத்தியது. இது தவிர அகல ரெயில் பாதை திட்டத்துக்காகவும் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் பெரும்பாலான மாநிலங்களில் மீட்டர் கேஜ் ரெயில் பாதை அகல ரெயில் பாதைகளாக மாற்றப்பட்டு விட்டன.
இந்த பாதைகள் அகற்றப்பட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் அப்படியே வீணாக கிடக்கிறது. இதையடுத்து தன்னிடம் உபரியாக உள்ள 12 ஆயிரத்து 66 ஏக்கர் நிலத்தை மாநில அரசுகளுக்கு விற்பனை செய்ய ரெயில்வே முடிவு செய்துள்ளது. இதுபற்றி ரெயில்வே வாரியம் தமிழ்நாடு, மேற்கு வங்காளம், மராட்டியம், மத்திய பிரதேசம், கர்நாடகா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது.
அதில், “உபரியாக இருக்கும் ரெயில்வேக்கு சொந்தமான நிலங்களை மாநில அரசுகள் தேசிய அல்லது மாநில நெடுஞ்சாலைகள் அமைக்கவோ அல்லது வேறு வித உபயோகத்துக்கோ பயன்படுத்திக்கொள்ள விலைக்கு பெறலாம். அல்லது நிலத்தை கைமாறுதல் செய்து கொள்ளலாம். சந்தை நிலவரப்படி நில மதிப்பு நிர்ணயிக்கப்பட்டு பணம் பெற்றுக்கொள்ளப்படும்” என்று கூறப்பட்டு உள்ளது.