பதவியேற்பு விழாவை எளிமையாக நடத்த அமரீந்தர் சிங் முடிவு
நிதி நெருக்கடி காரணமாக பதவியேற்பு விழாவை எளிமையாக நடத்திட, பஞ்சாப் முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள அமரீந்தர் சிங் முடிவு செய்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 77 தொகுதிகளை வென்றுள்ள காங்கிரஸ் கட்சி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க உள்ளது. அக்கட்சியின் முதல்மந்திரி வேட்பாளராக தேர்தலுக்கு முன்பாகவே அறிவிக்கப்பட்ட கேப்டன் அமரீந்தர் சிங், முறைப்படி சட்டசபை காங்கிரஸ் தலைவராக அக்கட்சி எம்.எல்.ஏ-க்களால் தேர்வு செய்யப்பட்டார். வருகின்ற 16-ம் தேதி அமரீந்தர் சிங் மற்றும் அவரது அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் முறைப்படி பதவியேற்கவுள்ளனர்.
இந்த நிலையில், நிதி நெருக்கடி காரணமாக பதவியேற்பு விழாவை எளிமையாக நடத்திட அமரீந்தர் சிங் முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பஞ்சாப் மாநிலம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால் பதவியேற்பு விழாவில் எந்த ஆடம்பரமும் இருக்காது.தற்போதைய சூழ்நிலையில் ஒவ்வொரு ரூபாயும் சேமிக்கப்படுவது மிக அவசியமாக உள்ளது. எனவே எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியேற்பு விழா அழைப்பிதழ்களை குறைந்த செலவில் அச்சடித்துக் கொள்ள வேண்டும்.
கட்சி ஆதரவாளர்கள் செலவு செய்து பிரமாண்ட பதாகைகளை சாலையோரங்களில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமது நடவடிக்கைகளின் மூலம் பஞ்சாப் மாநிலத்தை மீண்டும் வளமான மாநிலமாக மாற்ற முடியும் என, அமரீந்தர் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.