பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வந்தது. இதன் காரணமாக கடந்த 55 மாதங்களில் இல்லாத அளவுக்கு அவற்றின் விலை உயர்ந்து விட்டது. ஆசிய நாடுகளில் இந்தியாவில்தான், பெட்ரோல், டீசல் விலை மிக அதிகமாக உள்ளது.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.77.43, ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.69.56 என்று உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு என்று காரணம் கூறப்பட்டு வந்தாலும்கூட, அவற்றின் விலையில் மத்திய, மாநில அரசுகளின் வரிகள்தான் முக்கிய பங்கு வகிக்கின்றன.
டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.74.63 ஆகும். இதில் மத்திய அரசு விதிக்கிற உற்பத்தி வரி ரூ.19.48. டெல்லி மாநில அரசு விதிக்கிற மதிப்பு கூட்டு வரி ரூ.15.84 ஆகும்.
இதேபோன்று டெல்லியில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.65.93. இதில் மத்திய அரசு விதிக்கிற உற்பத்தி வரி ரூ.15.33. டெல்லி மாநில அரசு விதிக்கிற மதிப்பு கூட்டு வரி ரூ.9.68.
பெட்ரோல், டீசல் மீது மாநில அரசுகள் விதிக்கிற விற்பனை வரி அல்லது மதிப்பு கூட்டு வரி மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது.
பெட்ரோல், டீசல் விலையை இனியும் உயர்த்தினால், மக்கள் இடையே கொந்தளிப்பு ஏற்படும் என்ற எண்ணத்துக்கு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தள்ளப்பட்டு உள்ளன.
அதனால்தான் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், கிட்டத்தட்ட ஒரு வார காலமாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் உள்ளன.
இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், மத்திய அரசை சாடி டுவிட்டரில் பதிவுகளை வெளியிட்டு உள்ளார்.
அவற்றில் அவர் கூறி இருப்பதாவது:-
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தி உள்ளது.
பெட்ரோல், டீசல் மீதான வரியை லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைத்தால் ரூ.13 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்று மத்திய அரசு சொல்கிறது. ஆனால் பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு ஒரு ரூபாய் வரி உயர்த்துவது மக்களுக்கு ரூ.13 ஆயிரம் கோடி சுமையை ஏற்றுவது ஆகும்.
யாருடைய நலன் மேம்பட வேண்டும்? அரசின் நலனா அல்லது மக்களின் நலனா? மக்கள் மீது பெட்ரோல், டீசல் பெயரால் வரிச்சுமையை ஏற்றி நசுக்குவது, மத்திய அரசுக்கும், மக்களுக்கும் இடையேயான சண்டை போல ஆகிவிட்டது.