கோவையின் ஆன்லைன் மூலம் லாட்டரி சூதாட்டத்தில் ஈடுபடும் கும்பல் குறித்து போத்தனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வெள்ளளூரை சேர்ந்த கார்த்திகேயன், கனகராஜ், ரங்கராஜ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.8½ லட்சம் ரொக்கப்பணம், ஒரு கார், 2 லேப்டாப், 8 செல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து நடந்த விசாரணையில் இந்த கும்பல் கடந்த 1 வருடத்தில் மட்டும் கோவை சுற்று வட்டார பகுதிகளில் ரூ.18½ கோடிக்கு லாட்டரி சூதாட்டத்தில் பணம் பரிமாற்றம் செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கேரள மாநிலத்தில் நடைபெறும் லாட்டரி குலுக்கல் நம்பர் அடிப்படையில் இந்த கும்பல் கோவையில் 3 நம்பர் லாட்டரி சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆன்லைனில் 3 நம்பரை முன்பதிவு செய்து, 3 நம்பரும் அன்றைய லாட்டரியின் முதல் பரிசின் கடைசி எண்களாக இடம் பெற்றால் 3 நம்பருக்கு ரூ.25 ஆயிரம், 2 நம்பருக்கு ரூ.1000, கடைசி நம்பருக்கு ரூ.100 என்று கணக்கிட்டு சூதாட்ட பணபரிமாற்றம் நடைபெற்றுள்ளது.
ஒருவர் எத்தனை நம்பரையும் முன்பதிவு செய்யலாம். அதற்கு தகுந்தவாறு ஒரு டிக்கெட்டுக்கு ரூ.60 வீதம் கணக்கிட்டு வசூலிக்கிறார்கள். இவர்கள் ஆயிரக்கணக்கானவர்களை ஒருங்கிணைத்து தினசரி லாட்டரி என்ற பெயரில் ஏமாற்றி பணம் சம்பாதித்துள்ளனர்.
கடந்த 1 வருடத்தில் மட்டும் ரூ.18½ கோடிக்கு லாட்டரி சூதாட்டம் நடந்துள்ளது. பணத்தை வசூலிப்பதற்காக சப்-ஏஜெண்டுகளாக சிலர் செயல்பட்டு வந்துள்ளனர். அவர்கள் யார்-யார்? என விசாரணை நடந்து வருகி றது.
இவர்களுடன் தொடர்பில் இருந்த கோவையை சேர்ந்த கருப்பன் என்பவர் தலைமறைவாக உள்ளார். அவரை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர் பிடிபட்டால் இந்த கும்பல் பற்றி மேலும் பல தகவல்கள் தெரிய வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.