நெடுவாசல் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு அளித்த தீபா கணவர்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவை சேர்ந்த நெடுவாசல் உள்ளிட்ட இடங்களில் ‘ஹைட்ரோ கார்பன்’ எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல் நாடியம்மன் கோவில் குளக்கரை அருகில் கடந்த 16–ந் தேதி முதல் நெடுவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள 100 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அறவழியில் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது தவிர நல்லாண்டார் கொல்லை, கோட்டைக்காடு, கல்லிக்கொல்லை ஆகிய இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ள இடங்களிலும் போராட்டம் நடந்தது.
இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு கோட்டைக்காடு பகுதி மக்கள் தற்காலிகமாக தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர். ஆனால் நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை ஆகிய பகுதிகளில் கிராம மக்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், ‘எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை’யின் சார்பில் தீபாவின் கணவர் மாதவன் நேரில் சென்று போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அப்போது பேசிய அவர், மக்களுக்கு விருப்பம் இல்லாத திட்டத்தைக் அரசு கைவிட வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடும் வரையில் போராட்டம் தொடர வேண்டும். போராட்டத்துக்கு ‘எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை’ ஆதரவளிக்கும் என்று தெரிவித்தார்.