காணிகளை விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட இடங்களை மீண்டும் மக்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படுமென சட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது, “வடக்கில் யுத்தகாலத்தில் பாதுகாப்பு நிமித்தமாக தமிழர்களின் இடங்கள் கைப்பற்றப்பட்டன. அந்த இடங்கள் இன்றுவரை மீள ஒப்படைக்கப்படவில்லை. ஒப்படைக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை. இதற்கான காரணம் என்ன? என்று எழுப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,
தற்போதும் மக்கள் நிலங்களுக்காக போராட்டங்களைச் செய்துவருகின்றார்கள். அவர்களுக்கான நிலவிடுவிப்புகளை துரிதப்படுத்துவோம். இதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளது உண்மைதான்.

ஆனாலும் இதுவரையிலும் 1000 ஏக்கருக்கும் அதிகமான மக்களின் காணிகள் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதனைப் பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை. வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் காணிப் பிரச்சினைகள் உண்டு.

இப்போது காணி விடுவிப்புகளை அரச மறக்கவில்லை. இந்தச் செயற்பாட்டினை துரிதப்படுத்தப்படவேண்டும் என்ற நிலையே உள்ளது. விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.