இலங்கையில் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக தொடர்ந்தும் இடம்பெற்று வரும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.
இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகங்கள், சித்திரவதைகள், சிறுபான்மையினருக்கெதிரான வன்முறைகள் , மத ரீதியான அடக்குமுறைகள் ஆகியவற்றிற்கு தீர்வை பெற்றுக்கொடுப்பது தொடர்பாக எங்களது பரிந்துரைகளை ஏற்று, மனித உரிமைகள் பேரவையின் 30ஃ1 தீர்மானத்தின் உள்ளடக்கங்களை பொறுப்புக் கூறலுடன் முழுமையாக அமுல்படுத்த இலங்கை அரசு எடுத்துள்ள நகர்வுகளை நாம் வரவேற்கின்றோம்.
ஆரசின் ஆதரவுடனான இந்தப் பரிந்துரைகளில் நாம் மகிழ்ச்சி அடைகின்றபோதிலும், சிறுபான்மை சமூகங்களை இலக்குவைத்து அண்மையில் நடத்தப்பட்டுள்ள தாக்குதல்கள் தொடர்பில் நாம் கவலை கொண்டுள்ளோம்.
அத்துடன், அரசு மனித உரிமை மீறல்கள் மற்றும் அவற்றிற்கு பொறுப்பான அனைவரையும் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்துமாறும் சிறுபான்மையினரின் வழிபாட்டு இடங்களைப் பாதுகாக்குமாறும் நாம் வேண்டிக்கொள்கின்றோம்.
மேலும், முழுமையாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானம் 30ஃ1 மற்றும் அதனை மீளுறுதி செய்துகொண்ட தீர்மானம் 34ஃ1 ஆகியவற்றை அமுல்படுத்த நடவடிக்கைகளை எடுக்குமாறும் அரசை கோருகின்றோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.