நல்லாட்சியின் நகர்விற்கு மஹிந்த முட்டுக்கட்டை: கிழக்கு முதலமைச்சர்
இனப்பிரச்சினை தொடர்பான தீர்வை நோக்கிய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தலைமையிலான நல்லாட்சியின் நகர்விற்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாரிய அழுத்தங்களைக் கொடுத்து வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண முதலமைச்சரின் 18 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஏறாவூரில் செய்னுலாப்தீன் ஆலிம் வாவிக்கரை பொழுதுபோக்கு பூங்கா திறப்பு விழா இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், நல்லாட்சியின் நகர்விற்கு, மஹிந்த ஆட்சியாளர்களால் பாரிய அழுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டுவரும் இந்த சந்தர்ப்பத்தில் சிறுபான்மை இனங்களான தமிழர்களும் முஸ்லிம்களும் தற்போது இருப்பதைவிட மேலும் இறுக்கமான இன உறவைக் கட்டியெழுப்ப வேண்டும். நாட்டின் இனப்பிரச்சினை தீர்வில் அதிகாரப் பகிர்வைப் பெறுவதற்கு தமிழ், முஸ்லிம் இன ஐக்கியம் இன்றியமையாதது.
ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதான தலைமைகள் இன இணக்கப்பாட்டோடு அரசியல் தீர்வு தொடர்பான முன்னெடுப்புக்களை மிக நிதானமாக முன்னெடுத்து வருகின்ற இவ்வேளையில், தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் பங்களிப்பும், நிதானமும், ஆதரவும், அனுசரணையும் அவசியம் என்றும் குறிப்பிட்டார்.




