அமராவதியில் புதிய சட்டமன்றக் கட்டிடத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைப்பு
ஆந்திராவின் புதிய தலைநகர் அமராவதியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய சட்டமன்றக் கட்டிடத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று திறந்து வைத்தார்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிந்ததையடுத்து ஒருங்கிணைந்த ஆந்திராவின் தலைநகரமாக இருந்த ஐதராபாத் தெலுங்கானா வசம் சென்றுள்ளது. எனவே, ஆந்திராவின் புதிய தலைநகரம் அமராவதியில் உருவாக்கப்படுகிறது. இதற்கான கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தலைநகரின் பிரதான அங்கமான சட்டமன்ற கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், இன்று திறப்பு விழா நடைபெற்றது. முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு புதிய சட்டமன்றக் கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றினார். விழாவில் சட்டமன்றக் குழு தலைவர் சக்கரபாணி, சபாநாயகர் சிவப்பிரசாதராவ், துணை சபாநாயகர் மண்டலி புத்த பிரசாத் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
புதிய சட்டமன்றம் திறக்கப்பட்டதால், வரும் 6-ம் தேதி தொடங்க உள்ள பட்ஜெட் கூட்டத் தொடரில் இருந்து அனைத்து கூட்டங்களும் இந்த கட்டிடத்தில் நடைபெறும்.
இந்த புதிய சட்டமன்ற கட்டிடத்தில் சட்ட மேலவைக்கான பிரிவில் 90 இருக்கைகளும், சட்டமன்ற அவையில் 230 இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில், ஆந்திர சட்டமன்றத்தில் 176 உறுப்பினர் பதவிகளும், சட்டமேலவையில் 58 உறுப்பினர் பதவிகளும் உள்ளன. வருங்கால தேவையைக் கருத்தில் கொண்டு, கூடுதல் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சட்டமன்ற மற்றும் சட்டமேலவை உறுப்பினர்களுக்கான இருக்கைகள் அனைத்தும் மிகவும் தரமான நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு உறுப்பினரின் டேபிளிலும் அதிநவீன சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. மைக்ரோபோன், ஸ்பீக்கர், ரெக்கார்டர் மற்றும் வாக்கு எந்திரம் போன்ற வசதிகளை இந்த சாதனம் கொண்டுள்ளது.
இருக்கைகளில் அமரும் உறுப்பினர்கள் நன்றாக கால்களை நீட்டி மடக்கும் வகையில் விசாலமான இடவசதி மற்றும் வசதிக்கேற்ப இருக்கைகளை சாய்த்துக்கொள்ளும் வசதி உள்ளது.
சட்டசபையில் இதற்கு முன்பு நடந்த விரும்பத்தகாத சம்பவங்களை கருத்தில்கொண்டு, சபாநாயகரின் இருக்கையும் மேடையும் அதிக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.




