ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும் – ஜி.கே.வாசன்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கையில், ”புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமப் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை உடனடியாக நிறுத்தக்கூடிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும். இதைத் தான் இப்போதைய உடனடித் தேவையாக பொது மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
பாஜக. அரசு இப்பிரச்சினையை ஜல்லிக்கட்டு பிரச்சினையைப் போல, மீனவர் பிரச்சினையைப் போல வளர விடும் தனது வாடிக்கையான நடவடிக்கையை கைவிட வேண்டும்.
இத்திட்டத்தால் இப்பகுதியைச் சுற்றியுள்ள சுமார் 100 கி.மீ. பகுதியில் விளை நிலங்கள் பாதிப்பதோடு, நீர் ஆதாரமும் பாதிக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ளாதது ஏன் என்று தெரியவில்லை. இதனால் இப்பகுதி வாழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
எனவே விளை நிலங்களை, விவசாயப் பயிர்களை, விவசாயத் தொழிலை அழிக்கக்கூடிய, விவசாயிகளை, பொதுமக்களைப் பாதிக்கக்கூடிய இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும். இல்லையென்றால் இத்திட்டத்திற்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் போராட்டம் தொடர்ந்து கோண்டே போகும்.
இப்போராட்டத்தினால் அப்பகுதி வாழ் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை தடைபடுகின்றது. குறிப்பாக கூலி வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களின் வாழ்வு பெரிதும் பாதிக்கப்படுகிறது.
எனவே தமிழக அரசு இப்பிரச்சினையில் உள்ள முக்கியத்துவத்தை உணர்ந்து, தீவிர கவனம் செலுத்தி, இத்திட்டத்தை உடனே நிறுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
மேலும் இயற்கை வளத்தை பாதுகாக்கவும், எதிர்காலத் தேவையை கவனத்தில் கொண்டும் செயல்பட வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை” என்று வாசன் கூறியுள்ளார்.