கேப்பாபுலவு புதுக்குடியிருப்பு காணிப்பிரச்சனைக்கு தீர்வு:சம்பந்தன்
கேப்பாபுலவு புதுக்குடியிருப்பு பகுதிகளில் போராட்டங்களை நடத்தும் மக்களின் பிரச்சனைகளுக்கு எதிர்வரும் மார்ச் நான்காம் திகதி தாம் யாழ்ப்பாணம் செல்லுமுன்பாக முடிவுகாணப்படவேண்டும் என ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் கொழும்பில் இன்று ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த அவசர செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று மாலை 7 மணியளவில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன் நாடாளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.
கடந்த பல வாரங்களாக இடம்பெற்றுவருகின்ற கேப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதியுடன் இன்று மாலை 5மணியளவில் கலந்துரையாடியதாக இங்கு கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்தார்.
கடந்த 25 நாட்களுக்கு மேலதீகமாக மக்கள் ஒரு போராட்டத்தை ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திக்கொண்டு வருகின்றார்கள் .ஆனால் இதற்கொரு முடிவில்லை.தாமதமில்லாமல் இதற்கொரு முடிவெடுக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டபோது அவர் அரசாங்கத்தை பொறுத்தவரை இதில் எவ்விதமான பிரச்சனையும் இல்லை இந்தக்காணிகளை நாங்கள் மக்களுக்கு திருப்திக் கொடுப்பதற்கு நாங்கள் தயார்
ஆனால் கேப்பாபுலவைப் பொறுத்தவரையில் கேப்பாபுலவில் மக்கள் கோருகின்ற காணியில் அங்கிருந்து குடியிருந்த பிறகு அவர்களுக்கு வேறிடத்தில் காணிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றது. வீடுகளும் கட்டிக்கொடுக்கப்பட்டிருக்கின்றது. அவர்கள் தெரிவு செய்யலாம். தாங்கள் புது இடத்தில் தொடர்ந்து வாழப்போகின்றோமா ? அல்லது தங்களுடைய பழைய இடங்களுக்குப் போகப்போகின்றோமா என்பதை அவர்கள் தெரிவு செய்யலாம் என்ற முடிவை எடுத்து அவர்கள் அறிவித்தால் அரசாங்க அதிபருக்கு அவர்கள் விரும்பின இடத்திற்கு அவர்கள் போகலாம்
இந்த விடயங்கள் சம்பந்தமாக ஜனாதிபதி எங்களுடைய பிரசன்னத்தில் இராணுவத்தளபதியுடனும் விமானப் படைத்தளபதியுடனும் பேசி இந்தக்காணிகள் விடுவிக்கப்படவேண்டும் கேப்பாபுலவு காணிகள் வி-ம் புதுக்குடியிருப்பு காணிகள் வி-ம் தாதமில்லாமல் இரண்டொரு நாட்களுக்குள் இந்தக்காணிகள் விடுவிக்கப்படவேண்டும் என்ற கட்டளையை பிறப்பித்திருக்கின்றார்.அதேசமயம் பதில் பாதுகாப்பு செயலாளருடனும் பேசி அவருக்கும் இந்தக்கட்டளையைப் பிறப்பித்தார்.
இந்தக்கருமங்கள் சம்பந்தமாக சிலபல நாட்களுக்குள் ஒரு முடிவு வரும் என நாங்கள் கருதுகின்றோம். மக்கள் தங்கள் போராட்டத்தை நடத்த முன்பாக காணிகளுக்குள் திரும்பப்போக விரும்புகின்றார்கள். ஆனபடியால் போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வருவதற்கு மக்கள் காணிக்குள் திரும்பப் போகக்கூடிய நிலைமையை ஏற்படுத்த வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்தியிருக்கின்றோம் . அது நடைபெறும் என்ற வாக்குறுதி எமக்கு தரப்பட்டிருக்கின்றது.