மும்பை மாநகராட்சி தேர்தலில் சிவசேனாவுக்கு ஆதரவு கொடுக்க தலைவர் சரத்பவார் முடிவு
மும்பை மாநகராட்சி தேர்தலில் சிவசேனாவுக்கு ஆதரவு கொடுக்க தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் முடிவு செய்துள்ளார்.
மராட்டிய மாநில உள்ளாட்சி தேர்தலில் பல மாநகராட்சி மற்றும் நகரசபைகளை பாரதீய ஜனதா கைப்பற்றியது. ஆனாலும் நாட்டிலேயே பெரிய மாநகராட்சியான மும்பை மாநகராட்சியை பாரதீய ஜனதாவால் கைப்பற்ற முடியவில்லை.
இந்த மாநகராட்சியில் 227 கவுன்சிலர் பதவிகள் உள்ளன. கவுன்சிலர் எண்ணிக்கை அடிப்படையில் தான் மேயர் தேர்வு செய்யப்படுவார். ஆனால் இதில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.
அதில் சிவசேனா அதிக இடங்களை பிடித்து முன்னணியில் உள்ளது. அந்த கட்சிக்கு 84 இடங்கள் கிடைத்துள்ளது. பாரதீய ஜனதாவுக்கு 82 இடங்கள் கிடைத்திருக்கின்றன. மற்றொரு முக்கிய கட்சியான காங்கிரசுக்கு 31 இடங்களும், தேசியவாத காங்கிரசுக்கு 9 இடங்களும், மராட்டிய நவநிர்மான் சேனா கட்சிக்கு 7 இடங்களும் கிடைத்தன. 14 இடங்களை சுயேச்சை உள்ளிட்ட மற்றவர்கள் கைப்பற்றி உள்ளனர்.
மேயர் பதவியை பிடிப்பதற்கு சிவசேனா, பாரதீய ஜனதா இரு கட்சிகளும் முயற்சித்து வருகின்றன. தனி மெஜாரிட்டிக்கு 114 இடங்கள் தேவை. காங்கிரஸ் எந்த கட்சிக்காவது ஆதரவளிக்க முன்வந்தால் அந்த கட்சி எளிதாக மேயர் பதவியை பிடித்து விடும்.
ஆனால் பாரதீய ஜனதா, சிவசேனா இரு கட்சிகளுக்குமே பொது எதிரியாக காங்கிரஸ் உள்ளது. எனவே அந்த கட்சியின் ஆதரவை பெற இரு கட்சிகளுமே விரும்பவில்லை. அதே நேரத்தில் மற்ற கட்சிகளை இழுக்க முயற்சி நடக்கிறது. சிவசேனா இந்த முயற்சியை தீவிரமாக்கி உள்ளது.
9 கவுன்சிலர்களை பெற்றுள்ள தேசியவாத காங்கிரசின் ஆதரவை பெற சிவசேனா முயற்சித்தது.
இதுதொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
நாங்கள் சிவசேனாவுக்கு ஆதரவு தர தயாராகவே இருக்கிறோம். ஆனாலும் இது சம்மந்தமாக எந்த இறுதி முடிவும் இதுவரை எடுக்கவில்லை. மும்பையில் உள்ள உள்ளூர் தலைவர்கள் அவர்களாகவே இதில் முடிவு எடுத்து கொள்வார்கள்.
மும்பை நகர தேசியவாத காங்கிரசார் எந்த முடிவு எடுத்தாலும், அதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம். உரிய நேரத்தில் இந்த தலைவர்கள் நல்ல முடிவை எடுப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனால் சிவசேனாவுக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவளிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளித்தாலும் சிவசேனாவின் எண்ணிக்கை 93 ஆகிறது.
மேலும் 21 உறுப்பினர்கள் தேவைப்படுகிறார்கள். சுயேச்சைகள் சிலரை தங்கள் பக்கம் இழுக்க சிவசேனா முயற்சித்து வருகிறது. மராட்டிய நவநிர்மான் சேனாவும் அவர்களுக்கு ஆதரவளித்தால் மேயர் பதவியை சிவசேனா பிடிப்பதற்கு வாய்ப்பு உள்ளது.