நாசகர திட்டங்களை நிறைவேற்ற தமிழகம் என்ன பலியாடா? – வைகோ கேள்வி
அடுத்தடுத்து நாசகர திட்டங்களை நிறைவேற்றப்படுவதற்கு தமிழகம் என்ன பலியாடா? என மதிமுக பொதுச் செயலர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
உயர் நீதிமன்ற கிளை வளாகத்தில் மதிமுக பொதுச் செயலர் வைகோ திங்கள் கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்ற 2 மாதத்தில் சட்டம் நிறைவேற்ற வேண்டும். இப்பணிக்கு தேவையான நிதியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்டெர்லைட் வழக்கில் 7 மணி நேரம் வாதாடிய என்னை பார்த்து ‘உங்கள் நேர்மைக்கு யாருடைய அத்தாட்சியும் அவசியம் இல்லை. உலகம் அறிந்தது’ என தலைமை நீதிபதி லிபரான் கூறினார். அதை எந்த ஊடகங்களும் செய்தியாக வெளியிடவில்லை. ஒருவேளை எனது நேர்மை சந்தேகத்துக்கு இடமளிப்பதாக நீதிபதி கூறியிருந்தால் எட்டுகால செய்தியாக வெளியிட்டிருப்பார்கள்.
அதன் பிறகு இப்போது நீதிபதி ஏ.செல்வம், ‘நாட்டிற்கும், சமூகத்துக்கும் சிறப்பாக பணி செய்திருப்பதாக’ என்னை பாராட்டினார். எனது பொதுவாழ்வில் தமிழர்களின் நலன், வாழ்வாதாரத்துக்காக தொடர்ந்து பல ஆண்டுகளாக போராடி வருகிறேன்.
மீத்தேன் திட்டத்துக்கு எதிராக முதலில் குரல் எழுப்பியது நான் தான். அதன் பிறகு தான் நம்மாழ்வார் எதிர்ப்பு தெரிவித்தார். மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி வழங்கி தமிழகத்துக்கு துரோகம் செய்தவர் மு.க.ஸ்டாலின். அவர் பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது.
அவரது இந்த செயல் மன்னிக்க முடியாத துரோகம். தற்போது மீத்தேன், செயில் கேஸ் சேர்ந்த கலவையான ஹைட்டோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற துடிப்பது மிகப்பெரிய அநீதி.
இந்தியாவின் நலனுக்கு தமிழகம் தியாகம் செய்ய வேண்டும் என இல.கணேசன் அறிவுரை கூறியுள்ளார். இந்தியாவின் பொருளாதாரம், அன்னிய செலாவணி உயர தமிழகம் பலியாக வேண்டுமா? தமிழகம் என்ன பலியாடுகளா?
இந்த நாசகார திட்டத்தை எதிர்த்து இளைஞர்களும், மாணவர்களும் போராட்டத்தில் குதித்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. இதேபோல் சீமை கருவேல மரங்களை அகற்றுவதிலும் மாணவர்கள், இளைஞர்கள் ஈடுபட வேண்டும். கருவேல மரங்களை அகற்றாவிட்டால் நிலத்தடி நீர் அடியோடு பாழாகும். காற்று மண்டலம் நச்சு மண்டலமாக மாறும் என்றார் வைகோ.