அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள சுமார் 3 லட்சம் இந்தியர்கள் உட்பட 1.1 கோடி வெளிநாட்டினரை வெளியேற்ற திட்டம்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள சுமார் 3 லட்சம் இந்தியர்கள் உட்பட 1.1 கோடி வெளிநாட்டினரை வெளியேற்றுவது தொடர்பாக அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்ற டொனால்டு ட்ரம்ப், தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பல்வேறு அதிரடி நட வடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுப்பதற்காக குடியேற்ற விதிகளைக் கடுமை யாக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள 2 அமலாக்க உத்தரவுகளில் கூறியிருப்பதாவது:
சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு எந்த பிரிவின் கீழும் இனி விலக்கு அளிக்கப்படமாட்டாது. குடியேற்ற சட்ட விதிகளை யாராவது மீறி இருப்பது தெரியவந்தால் அவர்களைக் கைது செய்யவோ, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவோ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முழு அதிகாரம் வழங்கப்படுகிறது.
குறிப்பாக, சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு (சிபிபி) குடி யேற்ற மற்றும் சுங்க அமலாக்கத் (ஐசிஇ) துறையினர், முறையான ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருப்பவர்களை அடையாளம் கண்டு, அவர்களைப் பிடித்து உட னடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோல, குடியேற்ற ஆவணம் இல்லாமல் நாட்டுக் குள் நுழைய முயற்சிக்கும் வெளி நாட்டவர்களைத் தடுத்து நிறுத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான பணியில் உள்ளூர் போலீஸாரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் குடியேற்ற ஆவணம் இல்லாமல் தங்கி இருப்பவர்கள் குற்றச் செயலில் ஈடுபட்டிருந்தால் அவர்களை உடனடியாக வெளியேற்ற முன்னுரிமை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சுமார் 3 லட்சம் இந்தியர்கள் உட்பட 1.1 கோடி வெளிநாட்டினர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக அதிகாரப்பூர்வ மற்ற தகவல் கூறுகிறது. இந் நிலையில், அந்நாட்டு அரசின் கெடுபிடி காரணமாக இவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.
இதனிடையே, அரசின் இந்த உத்தரவுகளுக்கு ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட் உறுப் பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர்.




