தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு – கிழக்கு இணைப்பைக் கைவிட்டுள்ளது. ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்கு இணங்கி விட்டது என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், வடக்கு – கிழக்கு இணைந்த மாகாணத்துக்குள் கூட்டாட்சிக் (சமஷ்டி) கட்டமைப்புக்குள்ளே அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள் செயற்படுத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சித் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கான, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை வவுனியாவில் நேற்று வெளியிடப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, புளொட், ரெலோ ஆகிய கட்சித் தலைவர்களின் கையெழுத்துடன் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கையில் அரசியல் தீர்வு தொடர்பில் கூட்டமைப்பின்
நிலைப்பாடு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் தனித்துவமிக்க தேசிய இனம், வடக்குக் கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்களது பூர்வீக வாழ்விடங்கள், தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான மக்கள் என்ற அடிப்படையில் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர், கூட்டாட்சி (சமஷ்டி) கட்டமைப்புக்குள்ளே ஒன்றுபட்ட வடக்குக் கிழக்கு அலகைக் கொண்ட அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள் தொடர்ந்து செயற்படுத்தப்பட வேண்டும்.
தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் பகிரப்படும் அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகளின் மூலம் நன்மைகளைப் பெற உரித்துடையவர்.பகிரப்பட்ட இறையாண்மையின் அடிப்படையில் உருவாக்கப்படும் அதிகாரப் பகிர்வானது நிலம், சட்டம் ஒழுங்கு, சட்டத்தை நடைமுறைப்படுத்தல், தமிழ் மக்களின் பாதுகாப்பு, சமூக – பொருளாதார அபிவிருத்தி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், கல்வி, உயர்கல்வி, தொழிற்பயிற்சி, விவசாயம், கைத்தொழில், கடற்றொழில், கால்நடை அபிவிருத்தி, மொழி, பண்பாடு முதலியவற்றின் மீதும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் திரட்டிக் கொள்ளும் வளங்கள் மற்றும் நிதி அதிகாரம் மீதான ஏனைய விடயங்கள் தொடர்பானதாகவும் இருத்தல் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒஸ்லோ உடன்பாடு
தேர்தல் அறிக்கையில் ஒஸ்லோ உடன்பாடு தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு மாகாணசபைத் தேர்தல் அறிக்கையிலும், 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையிலும் கூறப்பெற்ற இந்தக் கொள்கைத் திட்டமானது 2002ஆம் ஆண்டு ஒஸ்லோ(நோர்வே) கொள்கைப் பிரகடனத்துக்கு ஒப்பானது ஆகும்.
‘ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ்ப் பேசும் மக்களின் வரலாற்று ரீதியிலான வாழ்விடப்பகுதிகளில் உள்ளக சுயநிர்ணய உரிமைக் கொள்கைப் பிரகாரம் கூட்டாட்சி (சமஷ்டிக்) கட்டமைப்பின் அடிப்படையிலமைந்த தீர்வொன்றை ஆராய்தல்’ என்பதாகும்.
இடைக்கால அறிக்கை
புதிய அரசமைப்பின் இடைக்கால அறிக்கை மீதான விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில், இடைக்கால அறிக்கையானது, இணக்கம் காணப்பட்ட விடயங்கள், இணக்கம் காணப்படாத விடயங்கள்; மற்றும் இணக்கத்திற்காகப் பேச வேண்டிய விடயங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளது. இது, இறுதித் தீர்வுத்திட்டமல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அப்படியிருக்கையில் இடைக்கால அறிக்கையை நிராகரிக்க வேண்டுமென்ற கூக்குரல் அறிவுடமையானது அல்ல.
இடைக்கால அறிக்கை தொடர்பில் எழுப்பப்படும் வினாக்கள்;, விமர்சனங்கள் உண்மைக்கு மாறாகப் புனையப்பட்டவை. இவை ஒருபுறமும்;, ‘இடைக்கால அறிக்கை நாட்;டைப் பிளவுபடுத்தப் போகின்றது’ என்ற கூச்சலோடு தென்னிலங்கையில் தேர்தல்காலப் பரப்புரைகள் மறுபுறமும் இடம்பெறுகின்றன.
இலங்கையில் நிலவி வரும் இனப்பிரச்சினைக்கோ, பிற பிரச்சனைகளுக்கோ தீர்வு காணக்கூடிய திட்டம் எதுவும் இல்லாத சிலர், ‘தலைமையை மாற்றவேண்டும்’ என்ற கூச்சலை முன்வைத்து வருகின்றனர். இவர்கள் தமிழர் விடுதலைக்காக அர்த்தமுள்ள செயற்பாடுகளோ திட்டங்களோ பங்களிப்போ அற்றவர்கள் என்பதை மக்கள் இனம்கண்டு கொள்ள வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் அரசுக் கட்சி 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் மற்றும் கொள்கை அறிக்கைகளிலிருந்து ஒரு போதும் விலகியோ, விட்டுக் கொடுத்தோ செயற்படாது என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்வதோடு இந்தக் கொள்கைத் திட்ட இலக்கை அடைவதற்கு அனைத்து முயற்சிகளையும் செயற்பாடுகளையும் மேற்கொள்ளும் என்பதையும் தெரிவிக்கின்றோம், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் ஆணை
தேர்தல் அறிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொறுப்பும் கடமையும் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், ஒருமித்த நாட்டில், கூட்டாட்சிக் கட்டமைப்பில் தன்னாட்சி அலகுகள் உருவாக்கப்பட்டு, அதிகாரங்கள் போதிய அளவில் பகிர்ந்தளிக்கப்பட்டு, அவை எவ்வகையிலும் மீளப் பெறமுடியாத பாதுகாப்போடு அரசமைப்பில் இடம்பெறவைப்;பது முதன்மையான கடமையாக இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாப்பில் தமிழ் மக்களுக்கு உரித்தான இறைமை, சுயநிர்ணய உரிமை, கூட்டாட்சிக் (சமஷ்டி) கட்டமைப்பில் கொழும்பு அரசால் திரும்பப் பெறமுடியாத, பாதுகாப்பான அடிப்படையில் பகிரப்பட்ட அல்லது கையளிக்கப்பட்ட முழுமையான அதிகாரங்கள் காணி, சட்டம் ஒழுங்கு, பொருளாதார, சமூக, கலாசார விடயங்கள், நிதி சம்பந்தமான அதிகாரங்கள், வடக்குக் கிழக்கு தமிழ் பேசும் மக்களின் பிரதேசங்கள் இணைக்கப்படுதல், கூட்டாட்சிக் கட்டமைப்பில்; வடக்கு கிழக்கு மாகாணம் அல்லது மாநிலங்களுக்கு முழுமையான பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்கள் கொண்ட தன்னாட்சி என்பன முக்கியமானவை ஆகும்.
வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் போர் முடிவடைந்த பின்னர் 2010ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தங்களது ஆணையை வழங்கி வந்துள்ளனர். ஒருமித்த நாட்டுக்குள் தங்களது இறையாண்மையின் வெளிப்பாடாகவும் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் கூட்டாட்சிக் கட்டமைப்பிலான அரசமைப்பை உருவாக்குவதே அந்த ஆணையாகும்.
ஆதரவு தேவை
இந்த ஆணையை நிறைவேற்றும் பணியில் நாம் நீண்ட தூரம் கடந்து வந்திருக்கிறோம். முதலில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி, அதன் பின் உருவாக்கப்பட்ட கூட்டு அரசு புதிய அரசமைப்பு உருவாக்கப் பணிகளை ஆரம்பிப்பதற்கான அனைத்து அழுத்தங்களையும் உள்நாட்டிலும் பன்னாட்டு ரீதியாகவும் ஏற்படுத்தினோம்.
இப்பொழுது வெளியாகியிருக்கும் ஏழு உபகுழுக்களின் அறிக்கைகளும் வழிகாட்டுக் குழுவின் இடைக்கால அறிக்கையும் ஆட்சி முறையில் ஏற்படுத்தப்பட இருக்கும் அடிப்படையான மாற்றங்களை எடுத்தியம்புகின்றன. இவை அனைத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுதியான முயற்சியால் அடையப்பட்டவை என்பதில்; மாற்றுக் கருத்துக் கிடையாது. இம்முயற்சிகள் தொடரப்பட வேண்டும். அதற்குத் தொடர்ந்தும் மக்களது ஆணையும் ஆதரவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே இருக்கின்றன என்பது இத்தேர்தலிலும் உறுதி செய்யப்பட வேண்டும் – என்றுள்ளது.