எதிர்ப்பு தெரிவித்த இலங்கை பேட்ஸ்மேன் நிரோஷன் டிக்வெல்லாவிற்கு 30 % அபராதம்: 2 போட்டியில் தடை
நடுவரின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இலங்கை பேட்ஸ்மேன் நிரோஷன் டிக்வெல்லாவிற்கு 30 சதவீதம் அபராதமும், 2 போட்டியில் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்றுமுன்தினம் நடைபெற்ற 2-வது போட்டியிலும் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 173 ரன்கள் குவித்தது. பின்னர் 174 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் நிரோஷன் 7 பந்தில் 3 பவுண்டரியுடன் 14 ரன்கள் எடுத்திருந்தார். பால்க்னெர் வீசிய அடுத்த பந்தை சந்தித்தார். பவுன்சரான பந்தை அடிக்க முயற்சி செய்தார். பந்து தோள்பட்டையில் பட்டு கீப்பரிடம் சென்றது.
ஆனால் நடுவர் விக்கெட் கொடுத்துவிட்டார். இதனால் கோபம் அடைந்த டிக்வெல்லா தரையில் தனது காலை கோபத்தில் உதைத்துவிட்டு, தோள்பட்டையை நீண்ட நேரமாக பார்த்துக் கொண்டிருந்தார்.
ஐ.சி.சி. விதிமுறைப்படி இவரது செயல்பாடு நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்படியாக அமைந்தது. இதனால் ஐ.சி.சி. அவருக்கு போட்டியின் சம்பளத்தில் இருந்து 30 சதவீதமும், போட்டியில் இருந்து தடை செய்வதற்கான இரண்டு புள்ளிகளையும் வழங்கியது.
தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியின்போது தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடாவுடன் மோதலில் ஈடுபட்டார். இதனால் போட்டி தடைக்கான மூன்று புள்ளிகள் வாங்கியதால், மொத்தம் ஐந்து புள்ளிகள் சேர்ந்தது. இதனால் இரண்டு போட்டிகளில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையால் டிக்வெல்லா நாளை நடைபெற இருக்கும் 3-வது மற்றும் கடைசி போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழக்கிறார்.