காபூல் ஓட்டலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பு கூறிஉள்ளது
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இன்டர்கான்டினென்டல் ஓட்டலில் நேற்று இரவு ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகள் நுழைந்து அங்கிருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பணயக்கைதியாக பிடித்தனர். தானியங்கி துப்பாக்கிகள், உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் தாக்குதலையும் முன்னெடுத்தனர். இந்த தாக்குதல் குறித்து தகவல் அறிந்த அந்நாட்டு பாதுகாப்பு படை விரைந்து சென்று எதிர்தாக்குதலில் ஈடுபட்டது. பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர் என்றும் 10 பேர் வரையில் காயம் அடைந்து உள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 4 பேர் கொல்லப்பட்டனர் எனவும் இருதரப்பு சண்டை முடிந்துவிட்டது எனவும் ஆப்கானிஸ்தான் அரசு கூறிஉள்ளது.
ஆனால் இன்னும் ஓட்டலில் இருதரப்பு இடையே சண்டை நேரிட்டு வருவதாகவும் இரண்டு பயங்கரவாதிகள் உள்ளே இருந்து எதிர்தாக்குதலை முன்னெடுத்து வருகிறார்கள் எனவும் ஆப்கானிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. 100-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். ஆப்கானிஸ்தானில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து சமீபத்திய மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதகரம் சமீபத்தில் தன்னுடைய நாட்டு பிரஜைகளுக்கு வெளியிட்ட எச்சரிக்கை செய்தியில், காபூலில் ஓட்டல்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளனர் என தகவல்கள் கிடைத்து உள்ளது, என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்று உள்ளது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்து உள்ளது. “இன்டர்கான்டினென்டல் ஓட்டலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவிக்கிறது. பயங்கரவாதத்தை ஒழிக்க நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு என்பது மிகவும் முக்கியமானது,” என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியும் கண்டனம் தெரிவித்து உள்ளார். பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்து, வளர்த்துவிடும் நாடுகளுக்கு எதிராக சர்வதேச நாடுகள் ஒரே வரிசையில் நிற்கவேண்டும் என குறிப்பிட்டு உள்ளார். முழு விசாரணை நடைபெறும் என கூறிஉள்ளார். பாகிஸ்தான் பயங்கரவாத பாதுகாப்பு புகலிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என அந்நாட்டுக்கு வழங்கிவந்த உதவியை அமெரிக்கா நிறுத்திவிட்டது. குறிப்பாக ஆப்கானிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு கரம் நீட்டுவதாகவே அமெரிக்காவின் குற்றச்சாட்டாகும், இப்போது ஆப்கானிஸ்தான் அதிபரின் விமர்சனமும் மறைமுகமாக பாகிஸ்தானை குறிப்பிட்டே உள்ளது என பார்க்கப்படுகிறது.