சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மான கடிதத்தை பேரவைச் செயலாளரிடம் வழங்கினேன்: ஸ்டாலின்
சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான கடிதத்தை பேரவைச் செயலாளரிடம் வழங்கியதாக ஸ்டாலின் கூறினார்.
திமுகவின் செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலகத்திற்கு இன்று நேரில் சென்று, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான கடிதத்தை பேரவைச் செயலாளரிடம் வழங்கினார். மேலும், அந்தக் கடிதத்தின் பிரதியை சட்டப்பேரவை தலைவரிடமும் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்ளிடம் ஸ்டாலின் கூறியதாவது:
”கடந்த 18-ம் தேதியன்று நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தில் சபாநாயகர் உள்நோக்கத்தோடு நடந்து கொண்ட முறையின் அடிப்படையில், அவர் மீது நம்பிக்கையில்லை என்ற சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதால், சட்டப்பேரவை தலைவர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரக்கூடிய வகையில் ஒரு கடிதத்தை முன்கூட்டியே பேரவை செயலாளரிடம் தந்து இருக்கிறோம். அதனுடைய பிரதியை சட்டப்பேரவை தலைவரிடமும் வழங்கி இருக்கிறோம்.
இன்று 2400 கோடி ரூபாயை வறட்சி நிதியாக விவசாயிகளுக்கு வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அது குறித்த முழு விவரங்களும் வந்த பிறகு எனது கருத்தை தெரிவிக்கிறேன்.
சட்டப்பேரவையில் என் சட்டை கிழிக்கப்பட்டது தொடர்பாக அதிமுகவினர் பலவித கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். அதுபற்றி ஆளுநரிடம் முறையாக புகார் அளித்து இருக்கிறோம். நாளை மறுநாள் குடியரசுத் தலைவரையும் சந்தித்து புகார் அளிக்க இருக்கிறோம். இதற்கிடையில் நீதிமன்றத்திலும் முறையிட்டு இருக்கிறோம். எனவே, சட்டப்படி அதை சந்திப்போம்.
ரேஷன் கடைகளில் பொருட்கள் முறையாக வழங்கப்படவில்லை, மானியம் நிறுத்தப்பட்டு இருப்பதால், மண்ணெண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட சில பொருட்கள் வழங்குவதையே நிறுத்தி விட்டார்கள் என்று புகார் எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை இப்போது மட்டுமல்ல, அதிமுக ஆட்சி தொடங்கியதில் இருந்தே தெரிவிக்கப்படுகின்றன. முதல்வரும் இப்போது கோட்டையில் தான் இருக்கிறார். எனவே, அவரை சந்தித்து, இந்த கேள்வியை கேட்டு, உரிய விளக்கத்தை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்” என்று ஸ்டாலின் கூறினார்.