தமிழக உள்ளாட்சித் தேர்தல் மே 14-ஆம் தேதிக்குள் முடிக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால உத்தரவு
தமிழக உள்ளாட்சித் தேர்தல் மே 14-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் வரும் மே மாதம் 14-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில் கடந்த நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு இடஒதுக்கீடு, குற்றப் பின்னணியில் உள்ளவர்கள் பங்கேற்கக் கூடாது என்று உத்தரவிட கோரி திமுக வழக்கு தொடுத்தது.
இதைத் தொடர்ந்து தேர்தலை ஒத்தி வைக்க பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து உள்ளாட்சிப் பணிகளை கவனித்துக் கொள்ள சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் மே 15-ஆம் தேதிக்குள் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை தெரிவித்திருந்தது.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் நூட்டி மோகனராவ், சுப்பிரமணியன் ஆகியோர் அமர்வு முன்பு இன்று நடைபெற்றது. அப்போது மே 14ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பிரதான வழக்கு விசாரணையை வரும் மார்ச் 1ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
‘தேர்தல் பணி தொடர்பான பயிற்சிகளை அதிகாரிகளுக்கு வழங்க வேண்டியதுள்ளது. அதனால், தேர்தல் வருகிற மே 15ம் தேதிக்குள் நடத்தப்படும்’ என்ற மாநில தேர்தல் ஆணையத்தின் வாதத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். குறிப்பிட்ட ஒரு தேதியை சொல்ல வேண்டும் என்று நீதிபதிகள் வழியுறுத்திய நீதிபதிகள், மே 14ம் தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு கெடு விதித்து உத்தரவிட்டது.
இதனால் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் தேதிகள் குறித்த அறிவிக்கைகள் ஏப்ரல் மாத மத்தியில் வெளியிட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.