10 ஆண்டுக்கு மேல் சிறையில் இருக்கும் ஆயுள்தண்டனை கைதிகள் விடுதலை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

மறைந்த முதல்-அமைச்சரின் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே அங்குவிலாஸ் மைதானத்தில் நேற்று மாலை நடந்தது.

விழாவில் ரூ.681 கோடி மதிப்பில் 115 கட்டிடங்களை திறந்து வைத்தும், ரூ.187 கோடி மதிப்பில் 105 திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள் உள்பட அனைவரும் எப்படி வாழ வேண்டும் என்று அவர்களை நெறிப்படுத்தும் வகையில் எம்.ஜி. ஆரின் பாடல்கள் இருக்கும். இதனால் எம்.ஜி.ஆர். இன்றும் தமிழக மக்களின் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை தந்துள்ளனர். ஆனால், சிலர் சுயநலத்துக்காக முன்பு மத்திய அரசிலும் அங்கம் வகித்து பதவி பெற்றுள்ளனர்.

நீதிமன்ற தீர்ப்பு இறுதி என்று நினைக்கிறார்கள். மக்கள் மன்றத்தில் அளிக்கப்படும் தீர்ப்பு தான் உண்மையான இறுதி தீர்ப்பாகும். ஒருவர் மக்களை ஏமாற்றி, வேடமிட்டு தற்காலிகமாக வெற்றியை பெற்று இருக்கிறார். இது நிரந்தரமான வெற்றி அல்ல. விரைவில் அவருடைய வேடம் கலையும். உண்மை நிலவரம் மக்களுக்கு தெரியவரும். எனவே, தர்மம் விரைவில் வெல்லும். அப்போது மக்கள் அவரை புரிந்து கொள்வார்கள்.

அ.தி.மு.க., பா.ஜனதாவின் கிளைக்கட்சி போன்று செயல்படுவதாக மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். அ.தி.மு.க. என்றும் தன்னாட்சியுடன் செயல்படும் கட்சி ஆகும்.

மத்திய அரசுடன் சுமுகமாக இருந்தால்தான் தமிழகத்துக்கு நல்ல திட்டங்கள் கிடைக்கும். எனவே, நாங்கள் சுமுகமான உறவு வைத்து செயல்படுகிறோம். தி.மு.க. போன்று பதவி, அதிகாரத்துக்காக மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படவில்லை. தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடி வருகிறோம்.

இதையொட்டி ஆயுள்தண்டனை பெற்று சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் இருப்பவர்கள், சட்டத்துக்கு உட்பட்டு, மனிதாபிமான அடிப்படையில் முன்விடுதலை செய்யப்படுவார்கள். இதற்கு தேவையான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கும். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து விழா மேடையில் எடப்பாடி பழனிசாமி ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் வகையில் கேக் வெட்டினார். மேலும் திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு வீரவாள் பரிசளிக்கப்பட்டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *