உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஆசனப் பங்கீட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள் உருவாகியுள்ள முரண்பாட்டுக்குத் தீர்வு காண்பதற்கு, எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கொழும்பில் நேற்று நடைபெற இருந்த கூட்டம் திடீரெனக் கைவிடப்பட்டது.
இன்று காலையில் அந்தச் சந்திப்பு சிலவேளைகளில் இடம்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஆசனப் பங்கீடு தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடையே முரண்பாடு ஏற்பட்டிருந்தது. இந்த முரண்பாடு காரணமாக, ரெலோ அமைப்பு தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்திருந்தது.
இதன் பின்னர், எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், ரெலோ கட்சியின் தலைவர்களுடன் அலைபேசியில் பேசின◌ார்.நேரில் சந்தித்துப் பேசுவதற்கும் அழைப்பு விடுத்திருந்தார். அதற்கு அமைவாக இன்றைய தினம் சந்திப்பு நடைபெறும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
நேற்றுமுன்தினம் இரவு இந்தச் சந்திப்பு திடீரென நேற்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று இரவு ரெலோ, தமிழ் அரசுக் கட்சி இடையிலான சந்திப்பு நடைபெறவில்லை. இன்று காலை இந்தச் சந்திப்பு சில வேளைகளில் நடக்கக் கூடும் என்று தெரி விக்கப்பட்டது.