வடக்கில் மீள்குடியமர்வுக்காக நோர்வே அரசு மேலதிக நிதியுதவியாக 150 மில்லியன் ரூபா வழங்கவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.இது தொடர்பில் நோர்வேத் தூதரகம் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:
யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக விடுவிக்கப்பட்ட மயிலிட்டித் துறைமுகத்தை அண்டிய பகுதிகளில் மீளக் குடியமரும் மக்களுக்கான உதவிகளை வழங்குவதற்கு 150 மில்லியன் ரூபாவை வழங்க முன்வந்துள்ளது.
இதற்கான உடன்படிக்கையில் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நோர்வேஜியத் தூதுவர் தூர்பியோன் கவுஸத்சேத்த மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சித் திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி ஜோன் சொரென்ஸ்டன் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
மயிலிட்டித் துறைமுகத்தை மீன்பிடிக்கான மூலோபாய மையமாக மாற்றுவதற்கும் உடனடி இடையீட்டின் ஊடாக வள்ளங்கள் இந்தத் துறைமுகத்தைப் பயன்படுத்துவதற்கான வழியை ஏற்படுத்தவும் ஐக்கிய நாடுகள் சபையானது நிகழ்ச்சித் திட்டத்தின் மூலமாக இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்றவுள்ளது.
இந்த உதவியானது மீன்பிடி, விவசாய, கால்நடை மற்றும் மாற்று வருவாய் தரக்கூடிய செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள சமூகங்களுக்கு நின்று நிலைக்கக்கூடிய வாழ்வாதார வாய்ப்புக்களை உருவாக்குவதனூடாக அவர்களின் பொருளாதார வாய்ப்புக்களை மீளமைக்க உதவுவதை நோக்காகக் கொண்டது.
இதற்காகச் சமூகமட்டத்தில் திறன் பயிற்சிகள், பயனுள்ள ஆலோசனைகள், கருவிகள், உபகரணங்கள், விதைகள், அத்தியாவசியமான கட்டுமானங்கள் மற்றும் உள்ளூர்வேலைவாய்ப்புகள் போன்றவற்றை வழங்கவுள்ளது.
இந்த உதவியானது புதிதாக விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மீளக்குடியமரும் 550 குடும்பங்களை பயனாளிகளாகக் கொண்டது.
நவம்பர் 2015 முதல் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மீள்குடியேற்றம் ஆரம்பித்தது முதல் நோர்வே அரசு யாழ்ப்பாணத்தின் வளலாய், தெல்லிப்பழை பகுதிகளிலும் திருகோணமலையின் சம்பூர் பகுதியிலும் புதிதாகக் குடியேறிய மக்களின் வாழ்வாதாரங்களுக்காக ஏற்கனவே 290 மில்லியன் இலங்கை ரூபாவை வழங்கியுள்ளது என்று மேலும் தெரிவித்தது.