தமிழர்களின் தலைவரான இரா.சம்பந்தனை வெறுங்கையுடன் வடக்குக்குத் திருப்பி அனுப்பினீர்கள் என்றால் சிங்களக் கட்சிகளை வரலாறு மன்னிக்காது என்று தெரிவித்தார் அமைச்சர் மனோகணேசன்
மறைந்த தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகம், தமிழர்களைக் கடவுள்தான் காப்பாற்றவேண்டும் என்றார். சம்பந்தனை, இலங்கை நாட்டையே கடவுள்தான் காப்பாற்றவேண்டும் என்று சொல்லும் நிலமைக்குத் தள்ளி விடாதீர்கள்.
அவரைப் பலவீனப்படுத்தி, தீவிரவாதிகளை பலப்படுத்திவிடாதீர்கள்” என்றும் அவர் கோரினார்.
அரசமைப்பு நிர்ணய சபையில் இடைக்கால அறிக்கை மீதான நேற்றைய விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது:
எனக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பல முரண்பாடுகள் உள்ளன. வழிகாட்டல் குழுவில் நான் கூட்டமைப்புப் பிரதிநிதிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளேன். அது வேறு விடயம். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் இன்று மிகவும் இறங்கி வந்து பேச்சு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அதைவிட
அவரால் இறங்க முடியாது என்று நான் அறிவேன்.
அவரை தயவு செய்து வெறுங்கையுடன் வடக்குக்கு அனுப்பி வைத்து விடாதீர்கள். அப்படி அனுப்பி வைத்தால் வரலாறு உங்களை மன்னிக்காது என்பதை ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திர கட்சி, மகிந்த அணி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய சிங்களப் பெரும்பான்மை கட்சிகள் புரிந்து கொள்ளவேண்டும்.
இந்த நாட்டில் வடக்கில், மலையகத்தில், கிழக்கும் மேற்கில், தெற்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வு என்பதும், அதனுடன் சேர்ந்த தேசிய இனப்பிரச்சினை தீர்வும் முக்கிய விடயங்களாக இருக்கின்றன. நாம் இதை முக்கிய தேவைகளாக கொண்டே இந்த அரசமைப்பு விவகாரத்தில் இணைந்து கொண்டுள்ளோம். முஸ்லிம் மக்களின் நிலைப்பாடும் இதுவே என்று நான் எண்ணுகிறேன்.
நாங்கள் தேர்தல்முறை மாற்றம் தொடர்பிலும் அக்கறை கொண்டுள்ளோம். தமிழ் முற்போக்கு கூட்டணி, நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறைமையை முழுமையாக மாற்ற உடன்படவில்லை. அதிகாரம் குறைக்கப்பட்டு, நாடாளுமன்றத்துக்கு பதில் சொல்லும், மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படும் அரச தலைவர் முறைமையையே நாம் விரும்புகிறோம்.
இந்த நாட்டில் வாழும் பிரதான இரண்டு இனங்கள் மத்தியில் ஒன்றன் மீது ஒன்றுக்குச் சந்தேகங்கள் இருக்கின்றன. அச்சங்கள் இருக்கின்றன.
சிங்கள மக்களின் அச்சம் என்ன? தமிழர்கள் மீண்டும் தனியொரு ஈழநாட்டை நோக்கி பயணிப்பார்களா என்பது. தம் அரசியல் இலக்கை அடைய மீண்டும் ஆயுத போரை ஆரம்பிப்பார்களா என்ற அச்சம் சிங்கள அரசியல் கட்சிகள் மத்தியில் உள்ளன. இவை மிக நியாயமான அச்சங்கள்.
தமிழ் மக்கள் மத்தியில் இரண்டு அச்சங்கள் உள்ளன. ஒன்று, இந்த நாடு முழுக்க முழுக்க சிங்கள பௌத்த நாடாக மாற்றப்பட்டு விடுமோ என்ற அச்சம் அதில் ஒன்று. அடுத்தது, அதிகாரம் பகிர்ந்து வழங்கப்படாமல் தாம் ஏமாற்றப்பட்டு விடுவோமோ என்பது. இவையும் மிகவும் நியாயமான அச்சங்களே. இவற்றை சிங்கள மக்களும், கட்சிகளும் புரிந்துக்கொள்ள வேண்டும்.
இங்கே எனக்கு முன் உரையாற்றிய மகிந்த ராஜபக்ச, தான் கொள்கை அடிப்படையில் அதிகார பகிர்வுக்கு உடன்படுகிறார் என்று கூறினார். தேசிய ஐக்கியத்தை விரும்புகிறார் என்றும் கூறினார். இந்தக் கருத்துகளை நான் வரவேற்கிறேன். இங்கே சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார்.
அதுபற்றி நான் ஒன்றை கூறவேண்டும். நாட்டின் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை, ஏற்றுகொண்டதன் மூலம், சம்பந்தன் இன்று இலங்கை நாட்டு வியூகத்துக்குள் வந்துவிட்டார். அதன்மூலம், தனிநாடு என்ற வியூகத்தை கைவிட்டு விட்டார். சிங்கள மக்களுக்கு இதன்மூலம் அவர் வழங்கியுள்ளது நல்ல ஒரு செய்தியாகும்.
இதை மகிந்த ராஜபக்ச புரிந்துக்கொள்ள வேண்டும்.
இனிமேல் இங்கே இல்லாததை சொல்லி நாட்டை குழப்புவதை விட்டுவிட்டு நாம் தேசிய ஐக்கியத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும்- என்றார்





