தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்க! – மைத்திரிக்கு சம்பந்தன் அவசர கடிதம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை மேலும் தாமதமின்றி உடன் விடுவிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அவசர கடிதம் எழுதியுள்ளார்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியல் கைதிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், அவர்களின் கோரிக்கை தொடர்பிலும், அனைத்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரில் பேசுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் அனுமதி கேட்டிருந்தனர். எனினும், ஜனாதிபதி செயலகத்திலிருந்து சந்திப்புக்குரிய அழைப்பு இன்று காலை வரை வரவில்லை.

இந்நிலையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இந்தக் கடிதத்தை இன்று பகல் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நீண்டகாலமாகத் தமது விடுவிப்பைக் கோரி வருகின்றனர். அந்தக் கைதிகள் சார்பாக இந்தக் கடிதத்தைத் தங்களுக்கு எழுதுகின்றேன்.

பின்வரும் விடயங்களைத் தெரிவிக்க விரும்புகின்றேன்:-

(01) பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இந்தக் கைதிகள், தண்டனை விதிக்கப்பட்டவர்களாகவோ, குற்றஞ்சாட்டப்பட்டவர்களாகவோ அல்லது இன்னமும் குற்றச்சாட்டுக்கள் வழங்கப்படாதவர்களாகவோ இருந்தாலும் அவர்கள் அனைவரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழேயே கைது செய்யப்பட்டார்கள் என்பதுடன், அவர்களுக்கு எதிரான சகல நடவடிக்கைகளும் அச்சட்டத்தின் கீழேயே மேற்கொள்ளப்பட்டன.

(02) இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் கொடூரமான, வெறுக்கத்தக்க ஒரு சட்டம் என்பதும் அது காலத்துக்குப் பொருத்தமற்றதென்பதும் இலங்கை அரசினால் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக உள்நாட்டு மற்றும் சர்வதேச நியமங்களுக்கு ஏற்புடைய வகையில் புதிய சட்டமொன்றை உருவாக்கப் போவதாக உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் அரசு உறுதி வழங்கியிருந்தது.

(03) இந்த உறுதியளிக்கப்பட்ட கடப்பாட்டை இலங்கை அரசு இன்னமும் நிறைவேற்றவில்லை. ஆனாலும், இதன்மூலம் குறித்த சட்டம், சட்டப் புத்தகங்களில் தொடர்ந்திருக்க மாட்டாதென்ற இலங்கை அரசின் உறுதியளிக்கப்பட்ட கடப்பாட்டிலிருந்து தவற முடியாது.

(04) இந்த நபர்களில் அநேகமானவர்களுக்கு எதிராக இருக்கும் ஒரேயொரு சான்று அவர்களின் விருப்பத்துக்கு மாறாகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமே என்பதோடு, அது சாதாரணமான நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிரான சாட்சியமாக ஏற்கப்பட மாட்டாது. இதனால் வழக்குத் தொடுநர்களிடம் போதிய சாட்சியங்கள் இல்லாமை காரணமாக அனேக வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.

(05) அநேகமாக இவர்கள் எல்லோருமே கைதுசெய்யப்பட்டவுடன் குற்றத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தால் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய காலத்தைப் போன்ற நீண்ட காலத்திற்குத் தடுப்புக்காவல் கைதிகளாகவே இருக்கின்றனர்.

(06) தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இவர்களின் குடும்பங்கள் அவர்களின் உழைப்பாளிகளின் ஆதரவு இல்லாமல், நீண்டகாலமாக வேதனையில் வாடுகின்றன. மிகவும் காத்திரமான இம் முக்கிய விடயத்திற்கு இதுவரை கவனம் செலுத்தப்படவில்லை.

(07) பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் தீய அம்சங்களுக்கும் புறம்பாக, மக்கள் விடுதலை முன்னணியினர் (ஜே.வி.பி.) கிளர்ச்சிகளை மேற்கொண்ட வேளையில் கைதுசெய்யப்பட்டவர்கள் யாவரும் மன்னிப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். இதேபோன்ற ஒரு கொள்கையை தற்போதுள்ள இந்தக் கைதிகள் விடயத்திலும் செயற்படுத்த முடியாமலிருப்பது ஏன் என்பதை விளங்கிக் கொள்ள முடியாதுள்ளது.

(08) இந்த வழக்குகள் முழுமையாகச் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்பில் உள்ளவை என்பதாகக் கருத முடியாது. அரசின் பிரதம சட்ட ஆலோசகர் என்ற வகையில் சட்டமா அதிபருக்குரிய கௌரவத்தை வழங்கும் அதேவேளை, இவ்வழக்குகள் அரசியல் அடையாளங்களையும் கொண்டிருப்பதனால் இவை முழுமையாகச் சட்டம் சம்பந்தப்பட்டவை என்று கருதிவிட முடியாது.

இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு உரிய நேரத்தில் தீர்வு காணப்பட்டிருந்தால், கைதிகளாக உள்ளவர்களில் அநேகமானவர்களுக்குத் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை ஏற்பட்டிருக்கமாட்டா என்றும், அவர்கள் பயனுள்ள பிரஜைகளாக இருந்திருப்பார்கள் என்றும் கூறுவதில் நியாயமிருப்பதைத் தெரிவிக்க முடியும்.

இத்தகைய சூழ்நிலையில், தாங்கள் இந்த விடயத்தை அரசியல் ரீதியாகவும் நோக்க வேண்டிய கடப்பாட்டை உருவாக்கியுள்ளது. இந்த விடயம் அரசியல் ரீதியாகக் கையாளப்படாமலிருப்பது இன இணக்கத்தை ஏற்படுத்துவதிலும், நன்மதிப்பையும் அமைதி நிலைமையையும் மீள ஏற்படுத்துவதிலும் வலுவான தடையாகவே அமையும்.

(09) சில வழக்குகள் வவுனியாவில் இருந்து அநுராதபுரத்துக்கு இடமாற்றப்பட்டதன் மூலம் சில தேவையற்ற முரண்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சாட்சிகளுக்குப் பாதுகாப்பு அவசியமாயின் வழக்குகளை இடமாற்றம் செய்யாமல், சாட்சிகளுக்கான பாதுகாப்புக்களை வழங்கியிருக்க முடியும்.

இந்தக் கைதிகள் மேலும் தாமதமின்றி விடுவிக்கப்பட வேண்டுமென நான் வலுவான கோரிக்கையை விடுக்கின்றேன்.”

– இப்படி ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தின் பிரதிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரள மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Loading…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *