புதுடில்லி, பிரதமர் மோடியை திருமணம் செய்வதற்காக, ராஜஸ்தானை சேர்ந்த பெண், டில்லியில், ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்.
டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரை சேர்ந்தவர், ஓம் சாந்தி சர்மா, ௪௦. பிரதமர் மோடியை திருமணம் செய்ய விரும்பி, டில்லி ஜந்தர் மந்தரில், ஒரு மாதத்துக்கும் மேலாக, தர்ணா போராட்டம் நடத்திவருகிறார்.இது பற்றி, சாந்தி சர்மா கூறியதாவது:
பிரதமர் மோடி, தனி ஒருவராக, பல பணிகளை செய்து வருகிறார்; அதனால், பிரதமர் மோடியை திருமணம் செய்து, என்னால் முடிந்த உதவிகளை செய்ய ஆசைப்படுகிறேன். எனக்கு திருமணமாகி, விவாகரத்தாகிவிட்டது. ௨௦ வயதில் மகள் உள்ளார்.ராஜஸ்தானில், எனக்கு சொந்தமாக, விவசாய நிலங்கள் உள்ளன. என் எதிர்காலத்தை பற்றியோ, மகளை பற்றியோ கவலையில்லை. என் நிலத்தை விற்று, அதில், மோடிக்கு பரிசு வழங்குவேன். மோடியை சந்திக்க, என்னை அனுமதிக்க மாட்டார்கள் என தெரியும்; அதனால், டில்லியில் போராட்டம் நடத்துகிறேன். மோடி, திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கும் வரை, போராட்டத்தை வாபஸ் பெற மாட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.