Sunday , August 24 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / ஜெயலலிதா மரணத்தில் சசிகலா மீது சந்தேகம் என்பது ஒரு அணு அளவு கூட இல்லை – அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி

ஜெயலலிதா மரணத்தில் சசிகலா மீது சந்தேகம் என்பது ஒரு அணு அளவு கூட இல்லை – அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி

அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஒரு தனியார் டி.வி.க்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மேலூர் கூட்டத்தில் தினகரன் பேசும் போது ஜெயலலிதா மரணத்தில் விசாரணை கமி‌ஷன் அமைக்க வேண்டும் என்றார்.

அதன்பிறகு தான் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டது. ஜெயலலிதாவின் ஜீவனுக்கு என்ன நடந்தது என்பது எங்களுக்கு தெரியும். ஜெயலலிதா மரணத்தில் சர்ச்சைகள்தான் இருக்கிறதே தவிர அது உண்மை கிடையாது.

புரட்சித் தலைவி ஜெயலலிதா ஒரு முதல்-அமைச்சர். சிகிச்சை பெற்ற இடம் அப்பல்லோ மருத்துவமனை. அந்த மருத்துவமனை டாக்டர்கள், எய்ம்ஸ் டாக்டர்கள், வெளிநாட்டு டாக்டர்கள் தலா 8 மணி நேரம் என 24 மணி நேரமும் பொறுப்பாக இருந்து பணியாற்றி இருக்கிறார்கள். அவரை பார்த்துக் கொண்டனர். சிகிச்சை அளித்தனர்.

இதில் சந்தேகம் என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு அணு அளவு கூட இல்லை. திண்டுக்கல் சீனிவாசன் சொல்வது அவருடைய தனிப்பட்ட கருத்து. அவர் வேண்டுமென்றால் சசிகலா மீது சந்தேகம் கிளப்பட்டும். ஆனால் நான் யார் மீதும் சந்தேகம் கிளப்புகிற எண்ணத்தில் இல்லை.

ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை வேண்டும் என்று கோரிக்கை வைத்தது ஓ.பி.எஸ். ஆக இருக்கலாம். ஆனால் முடிவு எடுக்கப்பட்டது தினகரன் மேலூர் கூட்டத்தில் கோரிக்கை வைத்த பிறகுதான்.

தினகரன் புரட்சித்தலைவி ஜெயலலிதா குடும்பத்துக்கு தான் சொந்தம் என்கிறார். அங்குதான் பிரச்சினை. அவரே நீதி விசாரணை வேண்டும் என்று கேட்கிறார். அதனால்தான் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டது. அதன் விசாரணை விரைவில் தொடங்கும்.

சிறை தண்டனை வழங்கப்பட்ட போது சசிகலா கூவத்தூரில் இருக்கிறார். மறுநாள் அவர் குறிப்பிட்ட நேரத்தில் சென்று ஆஜராக வேண்டும்.

இந்த நேரத்துக்குள் தினகரனை துணை பொதுச் செயலாளராக நியமனம் செய்தது எல்லோருடைய மனதையும் புண்படுத்தி விட்டது. அதுதான் சசிகலா செய்த தவறு. 4 பேரை கொண்ட ஒரு கமிட்டியை அமைத்திருந்தால் இந்த நிலையே வந்திருக்காது.

ஆர்.கே.நகர் தொகுதியில் என்னைத்தான் சசிகலா நிற்க சொன்னார்கள் என்று தினகரன் கூறி போட்டியிட்டார். அந்த தேர்தலில் அவர் சசிகலா பெயரை பயன்படுத்தவில்லை.

தினகரன் ஆர்.கே.நகர் தேர்தலில் நிற்கும் போது நன்றாக இருந்தார். இன்று இருக்கும் தினகரன் அன்றைக்கு இல்லை. இன்று வாய்க்கு வந்தபடி பேசுகிறார். மந்திரியை 420 என்கிறார். திருந்துவார்கள் அல்லது திருத்தப்படுவார்கள் என்கிறார். இது அரசியல் கட்சி நடத்துபவர்கள் பேசுகிற பேச்சா.

தி.மு.க.வுடன் தினகரன் கை கோர்க்க ஆரம்பித்து விட்டார். ஆட்சியை கலைக்க முடிவு செய்து விட்டார். முதல்-அமைச்சரை 19 பேர் சேர்ந்து மாற்றி விட முடியுமா? இன்று தினகரன் பக்கம் 19 உறுப்பினர்கள் இருக்கும் நிலையில் நாளை எடப்பாடியை மாற்றினால் அவர் பக்கம் 19 பேர் போக மட்டார்களா? இது எப்படி தீர்வாகும்.

அ.தி.மு.க.வின் சட்ட திட்ட விதிகளின்படி பொதுச் செயலாளர் பொது உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர்.

சசிகலா அப்படி தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஆனால் அப்போதைய சந்தர்ப்ப சூழ்நிலை அப்படி. பொதுக்குழுவை கூட்டி இடைக்கால பொதுச் செயலாளராகத் தான் அவரை நியமித்தோம். சசிகலா இன்று செயல்பட முடியாத நிலையில் இருக்கிறார்.

பொதுச்செயலாளர் இறந்து விட்ட நிலையில் கட்சி சட்ட விதிகளின் படிபுதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்ய நீண்ட காலமாகும்.

அதனால் சட்ட விதிகளை ஒட்டி நாங்கள் தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலாவை நியமித்தோம். அவர் கட்சி பொறுப்பை கவனிக்க முடியாததால் ஒருங்கிணைப்பாளர் கமிட்டியை போட்டுள்ளோம்.

ஒரு வேளை ஜெயலலிதா சிறையில் இருந்தாலும் தற்போது போல முடிவு எடுத்திருப்போம். ஆனால் ஜெயலலிதா, தினகரன் போன்றவர்களை துணை பொதுச் செயலாளராக ஆக்கியிருக்க மாட்டார். ஜெயலலிதா, மூத்த அமைச்சர்கள் 3, 4 பேரை பொறுப்பில் வைத்திருப்பார். தனிப்பட்ட நபரிடம் ஒப்படைத்திருக்க மாட்டார். தினகரன் தன்னை சூப்பர் எம்.ஜி.ஆர். என்று நினைத்துக் கொண்டு சர்வாதிகாரமாக செயல்படுகிறார்.

சசிகலா பொதுச்செயலாளர் பணியை செய்ய முடியாமல் இருப்பதால்தான் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

https://www.youtube.com/watch?v=AU88D3CdCwg

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv