திருச்சி வருமான வரி அலுவலகத்தில் செந்தில்பாலாஜியின் நண்பர் – நிதி நிறுவன ஊழியர்கள் நேரில் ஆஜர்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கரூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள், ஆதரவாளர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள், ஜவுளி, நிதி நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 21-ந்தேதி முதல் முகாமிட்டு தொடர்ந்து 4 நாட்கள் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் செந்தில் பாலாஜியின் தீவிர ஆதரவாளரான தாரணி சரவணனுக்கு சொந்தமான நிதி நிறுவனத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். பல கோடி மதிப்பிலான பினாமி சொத்து குறித்த ஆவணங்கள், ரொக்கப்பணம், தங்க நகைகள் போன்றவை இந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்டது.

இந்த நிலையில் சோதனை தொடர்பாக வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு செந்தில் பாலாஜியின் நண்பர்கள் 10 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இன்று ஓட்டல் மற்றும் நிதி நிறுவன அதிபர் சுப்பிரமணியனுக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

அதன்படி திருச்சி கண்டோன்மென்ட்டில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராவதற்காக இன்று காலை 10.45 மணியளவில் நிதி நிறுவன அதிபர் சுப்பிரமணியன் மற்றும் நிதி நிறுவன ஊழியர்கள் 3 பேர் காரில் வந்தனர்.

பின்னர் அவர்கள் தங்களது நிதி நிறுவனத்தின் வருமானம், சொத்துக்கள் குறித்த விளக்க அறிக்கை, ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர். அதனை தொடர்ந்து வருமான வரித்துறை உதவி இயக்குனர் தலைமையிலான அதிகாரிகள் 4 பேரிடமும் விசாரணை நடத்தினர்.

அப்போது முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியுடனான தொடர்பு, பண பரிமாற்றம் தொடர்பாகவும் அதிகாரிகள் அதிரடியாக கேள்விகளை கேட்டனர். அதற்கு 4 பேரும் உரிய விளக்கம் அளித்துள்ளனர்.

செந்தில்பாலாஜியின் நண்பர்கள் வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானதையொட்டி திருச்சியில் உள்ள அலுவலகம் முன்பு கண்டோன்மென்ட் போலீஸ் உதவி கமி‌ஷனர் சச்சிதானந்தம், இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *