பெண்ணை பாலியல் தொந்தரவு செய்து பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரபல படத்தயாரிப்பாளர் கரீம் மொரானி, போலீசிடம் சரண்டர் ஆனார். திருமணம் செய்வதாக கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக கடந்த ஜனவரி மாதம் ஹயத்நகர் போலீஸ் நிலையத்தில், சென்னை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளரான கரீம் மொரானி மீது பெண் ஒருவர் புகார் அளித்து இருந்தார்.
2015 ஆம் ஆண்டு இந்த சம்பவம் நடைபெற்றதாக பெண் குற்றம் சாட்டியிருந்தார். ஏமாற்றுதல், பாலியல் பலாத்காரம், போலி வாக்குறுதிகள் அளித்தல், மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக தனக்கு முன் ஜாமீன் அளிக்க கோரி கரீம் மொரானி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், மொரானிக்கு முன் ஜாமீன் அளிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து, போலீஸார் முன் மொரானி சரண் அடைந்தார். சென்னை எக்ஸ்பிரஸ், தில்வாலே, ரா ஒன் உள்ளிட்ட ஏராளமான படங்களை கரிம் மொரானி தயாரித்துள்ளார்