சென்னை: தம் மீது எந்த நேரத்திலும் கைது நடவடிக்கை பாயும் என்பதால் தினகரன் தீவிர சட்ட ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
முதல்வர் எடப்பாடி தரப்பு – தினகரன் அணி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் அதிரடியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனை எதிர்த்து தினகரன் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு சென்றுள்ளது. அதேநேரத்தில் ஏற்கனவே நாஞ்சில் சம்பத்தை முடக்கியது போல தம் மீதும் வழக்குகள் பாயலாம்; கைது நடவடிக்கைகள் இருக்கலாம் என தினகரன் தரப்பு நினைக்கிறது.
அப்படி கைது நடவடிக்கைகள் பாய்ந்தால் அதை எதிர்கொள்வது எப்படி என்பது தொடர்பாக தினகரன் தரப்பு தீவிர சட்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறது. நீட் தேர்வுக்கு எதிராக நாளை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்படவே வாய்ப்பிருப்பதாக தினகரன் தரப்பு கருதுகிறது.
இருப்பினும் எந்த வழக்கின் கீழ் கைது செய்யப்படுவோம் என்பது புரியாத புதிராக இருப்பதாகவே கூறுகிறது தினகரன் தரப்பு.