‘ஜெயலலிதா மரணத்திற்கு, சசிகலா குடும்பமே காரணம்’ என, அமைச்சர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டி வரும் நிலையில், சிசிச்சை தொடர்பான போட்டோக்களை வெளியிட தினகரன் திட்டமிட்டுள்ளார்.
அ.தி.மு.க.,வின் இரு அணிகள் இணைந்த பின், தினகரன் மீது, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சரமாரியாக குற்றம் சாட்டி வருகின்றனர். செப்., 15ல், வடசென்னையில் நடந்த பொதுகூட்டத்தில், ‘தினகரன், மாமியார் வீட்டிற்கு செல்வார்’ என, முதல்வர் பழனிசாமி ஆவேசமாக பேசினார். அவரைத் தொடர்ந்து, ‘தினகரன் கதை, இன்னும் மூன்று நாட்களில் முடியும்’ என, அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.
‘ஜெ., மரணத்திற்கு, சசிகலா குடும்பமே காரணம்’ என, ஜெயகுமார், சீனிவாசன் உள்ளிட்ட பல அமைச்சர்களும், பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகின்றனர்.இதையடுத்து, தினகரன் அணியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், நேற்று அடையாறில் உள்ள, அவரது வீட்டில் ஆலோசனை நடத்தினர். பின், மன்னார்குடியில் உள்ள திவாகரனிடம், தினகரன்பேசினார். அப்போது, ‘மருத்துவமனையில் ஜெ., சிகிச்சை பெற்ற போது எடுக்கப்பட்ட புகை படங்களை, சசிகலாவின் அனுமதி பெற்று வெளி இடலாம்’ என, கூறியுள்ளார்.
இந்நிலையில், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை, வரும், 20ல், தினகரன் தலைமையில், 18 எம்.எல்.ஏ.,க்கள் சந்திக்க உள்ளனர். அப்போது, சசிகலாவிடம் அனுமதி பெற்று, ஜெ., சிகிச்சை பெற்ற போட்டோக்களை வெளியிட தினகரன் திட்டமிட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகும் என, அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.
https://www.youtube.com/watch?v=X1hmUXB-rKA