புதிய அரசமைப்பை உருவாக்கும் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை, வடக்கு மாகாண அமைச்சரவை விவகாரம் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் முக்கிய தீர்மானங்கள் எடுப்பதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 23ஆம் திகதி சனிக்கிழமை அம்பாறையில் நடைபெறவுள்ளது.
தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண சபை அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் மற்றும் தமிழரசுக் கட்சியின் வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைகளின் அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மத்திய செயற்குழு உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
வடக்கு மாகாண சபையின் அமைச்சரவையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பங்கேற்பதில்லை என்று அந்தக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் தீர்மானித்திருந்தனர். இந்தத் தீர்மானத்தை அங்கீகரிக்குமாறு கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்துக்கு அனுப்பியிருந்தனர்.
கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கடந்த மாதம் நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்தபோதும் அது பின்னர் ஒத்திவைக்கப்பட்டது.
இரண்டு தடவைகள் ஒத்திவைக்கப்பட்ட இந்தக் கூட்டம் எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் வடக்கு மாகாண அமைச்சரவை விவகாரம் மட்டுமன்றி, புதிய அரசமைப்பை உருவாக்கும் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மற்றும் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது.
https://www.youtube.com/watch?v=M3jscVQr7y0