ஐ.நா. ஆணையாளரின் கருத்து அபத்தமானது! – அடியோடு நிராகரிக்கின்றது இலங்கை அரசு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இலங்கை அரசின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லையென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல்ஹுசைன் தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக நிராகரித்துள்ள இலங்கை அரசு, இவை அபத்தமானதும், அபாண்டமானதெனவும் சாடியுள்ளது.

“சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்டமீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய நம்பகமான நடவடிக்கைகளை இலங்கை எடுக்காதது, சர்வதேச சட்ட நடவடிக்கைகளுக்கு இன்னும் அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல்ஹுசைன், 36ஆவது கூட்டத்தொடரின் ஆரம்ப உரையில் கூறியிருந்தார்.

ஹுசைனின் கருத்துகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன,

“ஐ.நா. ஆணையாளர் அவசரப்பட்டிருக்கின்றார். அவர் கருமங்களை நிதானமாக ஆராய்ந்து கருத்து வெளியிட்டிருக்கலாம்.

ஐ.நாவிடம் வாக்குறுதிகளை நிறைவேற்ற எமக்கு 2022ஆம் ஆண்டுவரை கால அவகாசம் உண்டு. இதில் நாங்கள் பரஸ்பரம் உடன்பட்டுள்ளோம். கால அவகாசம் அவ்வளவு இருந்தாலும் நாங்கள் அதுவரை காத்திருக்காமல் இயலுமான விரைவில் நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகின்றோம்” என்றார் மாரப்பன.

அவர் மேலும் கூறுகையில்,

“காணாமல்போனோர் அலுவலகத்தை அமைக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளோம். சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் பொறிமுறை, தடுப்புக்காவலில் உள்ளவர்களை விடுவிக்கும் செயற்பாடுகள், மக்களின் காணிகள் விடுவிப்பு போன்றவற்றை நாங்கள் படிப்படியாகச் செய்துவருகின்றோம்.

கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றி சர்வதேசத்திற்கு அளித்த கடப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம். நாங்கள் எதுவும் செய்யவில்லை என்று கூறுவதை ஏற்கமுடியாது.

ஆணையாளர் தனது கருத்தை ஒருதரம் மீளாய்வுசெய்து உண்மை நிலையைப் புரிந்துகொள்ளவேண்டும். எங்களுக்குத் தரப்பட்டுள்ள கால அவகாசத்தில் எல்லாவற்றையும் செய்துமுடிப்போம்” என்றார்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *