படையினருக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக்கு இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள அறிவிப்பால் கொழும்பிலுள்ள இராஜதந்திரிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர் என இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
எனவே, இலங்கையின் சமகாலப்போக்கு, ஜெனிவாத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசு காட்டும் ஆர்வம் தொடர்பில் ஆராய்வதற்காக கொழும்பிலுள்ள மேற்குலக இராஜதந்திரிகள் இவ்வாரம் கூடவுள்ளனர் எனப் பெயர்க் குறிப்பிட விரும்பாத மேற்குலகின் மூத்த இராஜதந்திரியொருவர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66 ஆவது ஆண்டுவிழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.
அதில் உரையாற்றிய ஜனாதிபதி, “போர்க்குற்றச்சாட்டு என்ற போர்வையில் இலங்கைப் படையினர்மீது கைவைப்பதற்கு எந்தவொரு வெளிநாட்டுக்கோ, நபருக்கோ, அமைப்புக்கோ இடமளிக்கமாட்டேன். புலிச்சார்பு அமைப்புகளிடம் பணம் வாங்கிக்கொண்டு அதன் கைக்கூலிகளாகச் செயற்படும் அரசசார்பற்ற அமைப்புகளின் தாளத்திற்கேற்ப ஆடுவதற்கு நான் தயாரில்லை” எனத் திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும் பிரேஸிலுக்கான இலங்கைத் தூதுவராகக் கடமையாற்றிய ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தலைமையிலான மனித உரிமை அமைப்புகள் பிரேஸிலில் போர்க்குற்ற விசாரணை வழக்கை தாக்கல் செய்திருந்தன.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஜனாதிபதியின் மேற்படி அறிவிப்பு அமைந்ததுடன், படையினருக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக்கு இடமளிக்கப்படாது என்பதையும் எடுத்துரைக்கும் வகையில் அமைந்திருந்தது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தின் பிரகாரம், பொறுப்புக்கூறும் கடப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு இலங்கை அரசு இணக்கம் வெளியிட்டிருந்தது.
அத்துடன், ஜெனிவாத் தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அது உறுதியளித்திருந்தது. இதனால்தான் இலங்கை அரசுக்கு அதைச் செய்வதற்கு 18 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டன. முன்னேற்ற அறிக்கை 2019 மார்ச் மாத அமர்வின்போது சமர்ப்பிக்கப்படவேண்டும்.
இந்நிலையில், ஜெனிவாவுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் வழங்கிய வாக்குறுதியை அலட்சியப்படுத்துவதாகவே ஜனாதிபதி மைத்திரிபாலவின் அறிவிப்பு அமைந்துள்ளது என மனித உரிமை செயற்பாட்டாளர்களும், தமிழ்ச் செயற்பாட்டாளர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.
வெளிநாட்டு இராஜதந்திரிகளும் இதே நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர்.
அதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 36ஆவது மாநாடு இம்மாதம் 11ஆம் திகதிமுதல் 29ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. மைத்திரியின் மேற்படி அறிவிப்பானது இதன்போது இலங்கைக்கு இராஜதந்திர நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.