“இறுதிப் போரில் ஜெனரல் ஜகத் ஜயசூரிய போர்க்குற்றங்களிலும், மனிதப் படுகொலைகளிலும் ஈடுபட்டமைக்கு தன்னிடம் ஆதாரங்கள் உள்ளன என்று முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பகிரங்கமாக அறிவித்துள்ளார். எனவே, சரத் பொன்சேகா எவ்வித தயக்கமுமின்றி நீதிமன்றில் ஆஜராகி உண்மையை வெளிப்படுத்தவேண்டும். பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும்வரை சரத் பொன்சேகாவின் கருத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊக்குவிக்கும்.”
– இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ்ப் பத்திரிகை ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் இராணுவத் தளபதியும் பிரேஸில் நாட்டுக்கான இலங்கைத் தூதுவராக இருந்தவருமான ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேஸிலில் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தலைமையிலான மனித உரிமை அமைப்புகள் போர்க்குற்ற வழக்குத் தாக்கல் செய்துள்ளன.
அவர் தூதுவராக இருந்த கொலம்பியா, பெரு, சிலி, ஆஜென்ரீனா, சுரினாம் ஆகிய 5 நாடுகளில் இதுபோன்ற மேலும் வழக்குகள் அவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்படுகின்றன.
2007ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டுவரை ஜெனரல் ஜகத் ஜயசூரிய வன்னிப் படைகளின் தளபதியாக இருந்தார். வவுனியாவிலுள்ள ஜோசப் முகாமிலிருந்து இவர் இராணுவ நடவடிக்கையை மேற்பார்வை செய்தார்.
2009ஆம் ஆண்டு போரின் இறுதிக்கட்டத்தில் ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் மேற்பார்வையில் இருந்த இராணுவப் பிரிவுகளால் வைத்தியசாலைகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகவும், காணாமல் ஆக்கப்பட்டதாகவும், சித்திரவதை செய்யப்பட்டதாகவும் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
வழக்குத் தாக்கல் செய்யப்படுவதை அறிந்த ஜகத் ஜயசூரிய நாடு திரும்பிவிட்டார். பதவிக்காலம் முடிந்ததால் அவர் நாடு திரும்பினார் என்று வெளிவிவகார அமைச்சு அறிவித்திருந்தது.
நாடு திரும்பிய ஜகத் ஜயசூரிய, இறுதிப் போரின்போது தான் எந்தக் குற்றங்களையும் செய்யவில்லை எனவும், இறுதிப் போரில் இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவே போருக்கான கட்டளைகளை வழங்கினார் எனவும் தெரிவித்திருந்தார்.
போரில் ஈடுபட்ட படையினரை மின்சாரக் கதிரைகளில் இருந்து பாதுகாத்துவிட்டதாக இந்த அரசு மார்தட்டுகின்றபோதும் சர்வதேச நீதிமன்றங்களில் படையினர் நிறுத்தப்படும் அச்சுறுத்தல் நீங்கவில்லை என்றும், அதற்கான உத்தரவாதத்தை ஐ.நாவிடமிருந்து அரசு பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இறுதிப் போரை வழிநடத்திய இராணுவத் தளபதியும் தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களைச் சந்தித்திருந்தார்.
அவர் அங்கு, இறுதிப் போரில் ஜெனரல் ஜகத் ஜயசூரிய மனிதப் படுகொலைகள் உள்ளிட்ட போர்க்குற்றங்களை இழைத்தார் என்பதை நிரூபிப்பதற்குத் தேவையான தகவல்கள் தன்னிடம் இருப்பதாகவும், உரிய சட்டநடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமாயின் சாட்சியாளராக முன்னிலையாகி, அந்தக் குற்றங்கள் தொடர்பில் விரிவாக விளக்கமளிக்க தான் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இறுதிப் போரில் கொலைகள், குற்றங்களுக்காக தான் கட்டளை பிறப்பிக்கவில்லை எனவும், தவறுசெய்த அதிகாரிகளைத் தண்டித்தால் போரில் பங்கெடுத்த இரண்டு இலட்சம் படையினர் போர்க்குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபடுவர் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
இறுதிப் போரில் வன்னிப் படைகளின் தளபதியாக இருந்த ஜகத் ஜயசூரிய போர்க்குற்றங்கள் மற்றும் மனிதப் படுகொலைகளில் ஈடுபட்டார் என்பதை இறுதிப் போரை வழிநடத்திய இராணுவத் தளபதியும் தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உறுதிப்படுத்தியுள்ளார். எனவே, இது தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்று அதன் தலைவர் சம்பந்தனிடம் தமிழ்ப் பத்திரிகை ஒன்று கேட்டபோது,
“இறுதிப் போரில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் இடம்பெற்றன என்பது உண்மை. இது தொடர்பில் சர்வதேச நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்ற விசாரணையை வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், இறுதிப் போரில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதப் படுகொலைகளில் ஈடுபட்டார் என வன்னிப் படைகளின் தளபதியாகவும் பின்னர் இராணுவத் தளபதியாகவும் இருந்த ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் போர்க்குற்ற வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஜெனரல் ஜகத் ஜயசூரிய போர்க்குற்றங்களிலும், மனிதப் படுகொலைகளிலும் ஈடுபட்டமைக்கு தன்னிடம் ஆதாரங்கள் உள்ளன என்று முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
எனவே, சரத் பொன்சேகா எவ்வித தயக்கமுமின்றி நீதிமன்றில் ஆஜராகி உண்மையை வெளிப்படுத்தவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும்வரை சரத் பொன்சேகாவின் கருத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊக்குவிக்கும்” – என்று தெரிவித்துள்ளார்.