மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைக்கு கண்டனம் தெரிவித்தும், ஒடுக்கப்பட்டுள்ள மக்களுக்கு இலங்கை அரசு நேசக்கரம் நீட்டவேண்டும் எனக் கோரியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை கொண்டுவரவுள்ளது.
இந்தத் தகவலை தமிழ்ப் பத்திரிகை ஒன்றிடம் உறுதிப்படுத்திய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம், ரோஹிங்யா முஸ்லிம்களுக்காக இலங்கை ஆதரவுக்குரல் எழுப்பவேண்டியதன் அவசியத்தைப் பற்றி தான் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரிடம் எடுத்துரைத்துள்ளார் என்றும் தெரிவித்தார்.
செப்டெம்பர் மாதத்துக்குரிய முதல்வார நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 6ஆம் திகதிமுதல் 8ஆம் திகதிவரை நடைபெறவுள்ள நிலையில், இந்த வாரத்துக்குள் மேற்படி சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளும் வகையிலான ஏற்பாடுகளை முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்றக்குழு செய்துள்ளது.
மியன்மாரில் ரக்கைன் மாநிலத்தில் வாழும் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக பலவழிகளிலும் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. எனினும், இது விடயத்தில் அந்நாட்டு அரசு மௌனம்காத்துவருவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
குறிப்பாக, இராணுவ ஆட்சிக்கு எதிராகவும், ஜனநாயகத்துக்காகவும் போராடி நோபல் பரிசுபெற்ற அரச தலைவி ஆங் சாங் சூகி, தீவிர நடவடிக்கைகளை முன்னெடுக்காமை கவலையளிக்கின்றது எனவும் அவை சுட்டிக்காட்டியுள்ளன.
கிளர்ச்சிக் குழுக்களை அடக்கும்போர்வையில் மக்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதால் ரோஹிங்யா முஸ்லிம்கள், அயல்நாடான பங்களாதேஷை நோக்கி அகதிகளாக படையெடுக்கின்றனர். இதனால் பங்களாதேஷ் எல்லைக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில், இலங்கையை நோக்கியும் அகதி அந்தஸ்து கோரி மக்கள் வருகை தந்தவண்ணமுள்ளனர். இதுவரையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர் என ஐ.நா. தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமின்றி ரோஹிங்யா முஸ்லிம் விவகாரம் தற்போது அனைத்துலக பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. எகிப்து உள்ளிட்ட முஸ்லிம் நாடுகள் நேரடியாக தலையிட்டுள்ளன.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே பாதிக்கப்பட்டுள்ள ஒடுக்கப்பட்டுள்ள நீதிக்காகப் போராடும் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், அனைத்துலக சமூகத்தினதும் இலங்கை அரசினதும் கவனத்தை இது விடயத்தில் ஈர்க்கும் நோக்கிலும் மேற்படி பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.