அரசமைப்பின் 20ஆவது திருத்தம் தோற்கடிக்கப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கு மீண்டும் குறித்த திருத்தச் சட்டமூலத்தை சில திருத்தங்களுடன் அனுப்புவதற்கான பணிப்புரையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ளார் என அறியமுடிகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபை அமைச்சர் பைஸர் முஸ்தப்பா ஆகியோருக்கு இடையிலான அவசர சந்திப்பின் பின்னரே மேற்கண்டவாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
இதேவேளை, பிரதமர் மற்றும் அமைச்சர் பைஸர் முஸ்தப்பாவுக்கு இடையிலான சந்திப்பொன்றும் பிரதமரின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொள்ள எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து பைஸர் முஸ்தப்பாவுக்கு பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார்.
முன்னர் ஜனாதிபதியால் அனுப்பப்பட்டிருந்த அரசமைப்பின் 20ஆவது திருத்தம் ஊவா மற்றும் தென் மாகாண சபைகளில் தோல்வி கண்டிருந்தன. அதேவேளை, சப்ரகமுவ, மேல், கிழக்கு, வடக்கு மாகாண சபைகளில் இழுபறியில் உள்ளது. வடமத்திய மாகாண சபையில் மாத்திரமே இதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியால் திருத்தங்களுடன் மீண்டும் அனுப்பப்பட்டுள்ள குறித்த சட்டமூலம் மீண்டும் தென் மற்றும் ஊவா மாகாண சபைகளில் அடுத்த வாரம் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது எனவும் அறியமுடிகின்றது.