ஜகத் ஜயசூரியவைக் கைதுசெய்தால் முன்னாள் போராளிகளை சிறைபிடிப்போம்! – மிரட்டுகிறார் சம்பிக்க

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

போர்க்குற்றச்சாட்டுகளை சுமத்தி முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமானால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள 12 ஆயிரம் முன்னாள் போராளிகளையும் கைதுசெய்யவேண்டிய நிலை ஏற்படும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜாதிக ஹெல உறுமயவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கட்டளைத் தளபதியாக இருந்த ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக தற்போது போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. அவர் யுத்த களத்தில் இறங்காவிடின் நாட்டில் சமாதானம் ஏற்பட்டிருக்காது. வருடத்துக்கு மூவாயிரம் உயிர்கள் யுத்தம் காரணமாக காவுகொள்ளப்பட்டன. தற்போது அந்நிலைமை இல்லை.

அப்படிப் பார்த்தால் இவரால் சுமார் 25 ஆயிரம் உயிர்கள் போருக்குப் பின்னர் பாதுகாக்கப்பட்டுள்ளதோடு, அச்சத்துடன் வாழும் சூழ்நிலையும் இல்லாமல் போயுள்ளது. இவை தொடர்பில் அரசு நன்கு சிந்திக்க வேண்டும். அவர் நாட்டின் பாதுகாப்புக்காகத்தான் யுத்தம் மேற்கொண்டாரே ஒழிய தனது தனிப்பட்ட காரணத்துக்காக அல்ல. இவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும், சர்வதேச ரீதியிலான அவர்களின் செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ருத்திரகுமார், விநாயகம், பாலசிங்கம், நெடியவன் உள்ளிட்ட புலிகளின் தலைவர்கள் இன்னும் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளின் இருந்துகொண்டுதான் இருக்கின்றார்கள்.

முன்னாள் இராணுவத்தளபதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமாக இருந்தால் இலங்கை அரசானது இஸ்ரேல் அரசு செய்ததைப்போல மேற்கண்ட தலைவர்களையும் உடனே கைதுசெய்ய வேண்டும்.

மஹிந்த காலத்தில் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டுள்ள புலிகளின் முன்னாள் உறுப்பினர்களான 12 ஆயிரம் பேரை மீண்டும் கைதுசெய்ய வேண்டிய நிலைமையும் இதனால் ஏற்படலாம்.

இது நல்லிணக்கத்துக்கும் சமாதானத்துக்கும் உகந்ததல்ல என்பதால் இதுவிடயத்தில் அனைத்து தரப்பினரும் சிந்தித்துச் செயற்படுவதே சிறந்ததாகும்” – என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *