Monday , August 25 2025
Home / முக்கிய செய்திகள் / ஜகத் ஜயசூரிய போர்க்குற்றவாளி! ஆதாரங்கள் என் வசம்; தண்டனை அவசியம்!! – பொன்சேகா வலியுறுத்து

ஜகத் ஜயசூரிய போர்க்குற்றவாளி! ஆதாரங்கள் என் வசம்; தண்டனை அவசியம்!! – பொன்சேகா வலியுறுத்து

“போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவத்தினரை கட்டாயம் தண்டிக்கவேண்டும். இராணுவ உடை அணிந்ததற்காக குற்றமிழைத்தவருக்கு தண்டனை வழங்காது இருக்கமுடியாது. முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய போர்க்குற்றங்களில் ஈடுபட்டமை தொடர்பிலான சான்றுகள் என்னிடம் உள்ளன. உரிய நீதி விசாரணை ஆரம்பிக்கப்பட்டால் அங்கு சாட்சியங்களை சமர்ப்பிக்க நான் தயாராகவுள்ளேன்.”

– இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

பிராந்திய அபிவிருத்தி அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“ஜகத் ஜயசூரியவை எனக்குப் பின்னர் இராணுவத் தளபதியாக்க வேண்டாம் என்று நான் அன்று மஹிந்த ராஜபக்ஷவிடம் ஆணித்தரமாக வலியுறுத்தியிருந்தேன். எனக்குப் பின்னர் இராணுவத் தளபதியாக அவருக்குத் தகுதியிருந்தது என்று அவர் அன்று ஏற்றுக்கொள்ளவில்லை. அவரைவிட சிரேஷ்ட தலைவர்கள் இருந்தனர்.

17இற்கும் அதிகமான உயர் அதிகாரிகள் இருந்தும் மஹிந்த ராஜபக்ஷவும், கோட்டாபய ராஜபக்ஷவும் அவர்களின் தேவைக்காக ஜகத் ஜயசூரியவை இராணுவத் தளபதியாக்கினர்.

அவரின் தலைமையின் கீழ்தான் என்னை சிறையிலடைத்தனர். யுத்தத்தின்போது மேஜர் ஜெனரல்களின் கட்டுப்பாட்டில்கீழ் பல்வேறு படைப் பிரிவுகள் காணப்பட்டன.

நான் குறித்த படைப்பிரிவுகளை எனது கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொண்டேன். பிரதேசத்துக்குப் பொறுப்பான கட்டளைத் தளபதிகளின் பொறுப்பின்கீழ் நான் படைப்பிரிவுகளை நியமித்திருந்தேன்.

அதன் அடிப்படையில் நான் வடக்கு மற்றும் கிழக்கில் நியமித்திருந்தேன். யுத்தத்தில் ஈடுபட்ட படைப்பிரிவுகளை எனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக்கொண்டேன். ஜகத் ஜயசூரிய வன்னியின் கட்டளைத் தளபதியாக அப்போது இருந்தார். யுத்தத்தின்போதுபடைப்பிரிவுகளை நான் அவரின் கட்டுப்பாட்டுக்குள் விடவில்லை.

அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த கடமைதான் வன்னியின் பங்கர் கட்டமைப்பைப் பார்த்துக்கொள்ளல். குறித்த பங்கர் ஓமந்தையில் இருந்தது. இதில் இருந்த சிப்பாய்கள் அவரின்கீழ் இயங்கினர். அத்துடன், யுத்தக்களத்தில் இராணுவத்தினருக்கு சேவை வழங்க மற்றும் கைதுசெய்தவர்களைப் பாதுகாத்தல் போன்ற விடயங்களும் அவருக்குப் பொறுப்பாக வழங்கப்பட்டன.

அந்தச் சந்தர்ப்பத்தில் ஜகத் ஜயசூரிய சில சில குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டுள்ளதாக அறியக் கிடைத்தது. யுத்தக்களத்தில் அவர் சண்டையிடவில்லையாயினும் கைதுசெய்யப்பட்டு பாதுகாப்புக்காக அவரிடம் ஒப்படைக்கப்பட்டவர்களிடம் குற்றச்சாட்டுகளில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் இராணுவத் தளபதியாகி பின்னரும் குறித்த செயற்பாடு தொடர்ந்தவண்ணமே இருந்தது.

அவரால் அநீதியிழைக்கப்பட்டவர்கள் தொடர்பிலான சான்றுகள் என்னிடம் உள்ளன. சட்ட ரீதியான விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டால் அங்கு குறித்த சாட்சியங்களை ஒப்புவிக்க என்னால் முடியும். என்னிடமிருந்து இவ்வாறான பதிலொன்று வருமென்று ஜகத் ஜயசூரிய எதிர்பார்த்திருக்கமாட்டார். அவர் குற்றமிழைத்ததை நான் அறிந்திருந்தேன். அது குறித்த நான் விசாரணையொன்றை ஆரம்பிக்க நடவடிக்கையெடுத்திருந்தேன்.

விசாரணைகளுக்காக அவரின் கீழ் இருந்த ஜெனரல் ஒருவரை நான் ஆரம்பகட்டமாக கைதுசெய்திருந்தேன். விசாரணைகளை ஆரம்பிக்கும்போது என்னை இராணுவத் தளபதி பதவியிலிருந்து தூக்கினர். அவரால் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு அப்போதிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலானர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் ஆசிர்வாதமும் கிடைத்ததாகத் தகவல்கள் உள்ளன” – என்றார்.

நீங்கள் அனுமதியளித்ததால்தான் குறித்த பொறுப்பில் இருந்தேன் என்று ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளாரே என்று ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த சரத் பொன்சேகா,

“அவர் இவ்வளவு நாள் அவ்வாறு சொல்லவில்லை. கோட்டாப்பய ராஜபக்ஷதான் அனுமதியளித்தாகக் கூறியிருந்தார். மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளைச் செய்யவே அவருக்கு அனுமதியளித்திருந்தோம். குற்றங்கள் இழைக்கவும், கொலை செய்யவும் நான் அனுமதியளித்திருக்கவில்லை. எமது இராணுவத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளிலிருந்து நாம் விடுபடவேண்டும். உலகம் ஏற்றுக்கொள்ளும் இடத்திற்கு எமது இராணுவத்தைக் கொண்டுசெல்லவேண்டும்.

இராணுவத்தினர் நாட்டுக்காக அர்ப்பணித்தனர். பாரிய கௌரவங்கள் கிடைக்கவேண்டிய சூழலில் இவ்வாறான குற்றச்சாட்டுகளால் குறித்த கௌரவம் இல்லாதுபோனது. யுத்தத்தின்போது சில இடங்களில் குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளன. அதற்கு முழு இராணுவமும் பொறுப்புக்கூறத் தேவையில்லை. சில தனிநபர்கள், ஒருவர் இருவர் செய்த குற்றங்கள் உள்ளன. விசாரணைகள் மேற்கொண்டு குற்றமிழைத்தவர்களைத் தண்டித்து இராணுவத்தின் கௌரவத்தைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்புள்ளது.

சர்வதேசம் மற்றும் ஐ.நாவுடனான ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் போர்க்குற்றங்களுக்கு தண்டனை வழங்க பொறிமுறையொன்று உள்ளது. அதனை நாட்டில் செய்யாவிடின் ஐ.நாவின் பாதுகாப்புச் சபையின் உறுப்புநாடுகளால் அதனை மேற்கொள்ளமுடியும். அதனடிப்படையில்தான் ஜகத் ஜயசூரிய உள்ளிட்டவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எவராவது குற்றமிழைத்தால் இலங்கையின் நீதியை விடுத்து இராணுவத்தின் நீதிப் பொறியில் தண்டனை வழங்கமுடியும். கடந்த காலத்தில் இடம்பெற்ற சில சம்பவங்களுக்கு உள்நாட்டுச் சட்டத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்டிருந்தது. அதனைச் செய்யமுடியும்.

இது குறித்து நடவடிக்கைகளை நாம் எடுக்காததன் காரணமாகவே சர்வதேச ரீதியில் எமக்கு எதிராக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இன்னமும் காலம் தாழ்ந்துவிடவில்லை. நாம் செய்யவேண்டிய கடமைகளை செய்யவேண்டும். போர்க்குற்றங்களை விசாரணை செய்வதாக தற்போதைய அரசு சர்வதேசத்திடம் தெரிவித்துள்ளது. இராணுவ உடை அணித்திருந்தாலும் குற்றம் இழைத்தால் தண்டனை வழங்கவேண்டியாது கட்டாயமானதாகும்” – என்றார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv