தமிழகத்தில் தியாகத்திற்கும், துரோகத்திற்கும் இடையேயான யுத்தம் நடைபெற்று வருவதாக அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தேனியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஆளுநர் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 122 எம்.எல்.ஏக்களும் எங்கள் ஆதரவாளர்கள் தான். ஆனால் அதில் ஒரு சிலர் தங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற நோக்கில் சுயநலத்துடன் செயல்பட்டு வருகின்றனர். வாக்காளர்கள் எந்த மனநிலையில் உள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும். கட்சியின் நலன் கருதி எந்த நடவடிக்கையையும் எடுக்க பொதுச்செயலாளர் சசிகலா எனக்கு அனுமதி வழங்கியுள்ளார்” என்று கூறினார்.
மேலும், “டிடிவி தினகரனும் ஸ்டாலினும் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்பர் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியது அவரின் சொந்த கருத்து. ஆனால் சுப்பிரமணியன்சாமி நான் மதிக்கின்ற தலைவர், அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். நாங்கள் பதவிக்காக அலைபவர்கள் அல்ல, நான் நினைத்திருந்தால் அப்போதே முதல்வராகியிருக்க முடியும். இன்றைக்கு நடைபெறுவது தியாகத்திற்கும் துரோகத்திற்குமான யுத்தம். ஜெயலலிதா அதிமுகவை ராணுவ கட்டுப்பாட்டுடன் நடத்தினார் என்றால் அதற்கு பின்னால் இருந்தவர்கள் யார் என்பது உங்களுக்கு தெரியும். தற்போதைய அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களில் 90 சதவிகிதம் பேர் எங்களால் அடையாளம் காட்டப்பட்டவர்கள்.
புதுச்சேரியில் உள்ள எம்.எல்.ஏக்கள் தியாகத்திற்கு துணை நிற்கிறார்கள். கொள்கைக்காக தங்கியிருக்கிறார்கள். தற்போது நடப்பது துரோகத்தின் அரசு. அதனை வெல்ல நாங்கள் போராடுகிறோம். கட்சியை காப்பாற்ற துரோகத்தை வெல்ல நாங்கள் போராடுகிறோம்” என்று டிடிவி தினகரன் கூறினார்.
https://www.youtube.com/watch?v=lw1Y3_7Sgow